தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்: விமல், ரமேஷ் கண்ணா, ஆர்த்தி மனு தள்ளுபடி செய்யப்பட்டது

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் ஜூன் 23ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், நடிகர்கள் விமல், ரமேஷ் கண்ணா, ஆர்த்தி கணேஷ் ஆகியோரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற 23-ந்தேதி (ஞாயிறு) தேர்தல் நடைபெறுகிறது. நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி மீண்டும் போட்டியிடுகிறது. செயலாளராக விஷால். பொருளாளராக கார்த்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இவர்களை எதிர்த்து பாக்கியராஜ் தலைமையில் அமைக்கப்பட்ட சுவாமி சங்கரதாஸ் அணி களம் இறங்கியுள்ளது. செயலாளர் பதவிக்கு ஐசரி கணேசும், பொருளாளர் பதவிக்கு பிரசாந்தும் போட்டியிடுகின்றனர். 2 அணிகளுக்கு இடையே கடும் போட்டி உருவாகி இருப்பதால் இந்த தேர்தலில் பரபரப்பு நிலவுகிறது.

தேர்தலுக்கான மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 90 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இன்று மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. அப்போது நடிகர் விமல், ரமேஷ்கண்ணா, நடிகை ஆர்த்தி கணேஷ் ஆகிய 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

சந்தா தொகையை சரியாக கட்டாத காரணத்தால் இவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் 3 பேரும் பாக்கியராஜ் அணி சார்பில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தனர்.