தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடக்கும் இடம் மாறுகிறதா?

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கு எதிராக வழக்கு, பதிவாளர் நோட்டீஸ் அடுத்தடுத்து சிக்கல்கள் முளைத்து வரும் நிலையில், தற்போது தேர்தல் நடத்தும் இடத்திற்கும் சிக்கல் எழுந்துள்ளது.

ஜூன் 23 ம் தேதி எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கல்லூரியில் தேர்தலை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.
தேர்தல் நடக்கும் எம்ஜிஆர் ஜானகி கல்லூரி அமைந்துள்ள பகுதியில் நீதிபதிகளின் வீடுகள், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் செல்லும் பாதை அமைந்துள்ளதால் பாதுகாப்பு அளிப்பது சிரமமாக இருக்கும். அன்றைய தினம் 8000 பேர் வரை கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு அளிப்பது சவாலாக இருக்கும்.
நடிகர் சங்க உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக தேர்தலின் போது பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என பட்டினபாக்கம் போலீசார் கல்லூரி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
இந்த கடிதத்தை கல்லூரி நிர்வாகம், நடிகர் சங்க தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனால் நடிகர் சங்க தேர்தல் வேறு இடத்திற்கு மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.