தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ரத்து கோர்ட் தீர்ப்பால் நாசர் விஷால் டென்ஷன்; ஐசரி கணேஷ் ஹாப்பி!

அண்மைக்காலமாக தமிழக அரசியல் தேர்தல் அளவுக்கு தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலும் களைக்கட்டி வருகிறது.

பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது.

கடந்த 2019 ஆண்டு ஜூன் 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது.

ஆனால் இதற்கு முன்பே சில உறுப்பினர்கள் அளித்த புகாரின் பேரில் ஜூன் 19ஆம் தேதி தேர்தலை நிறுத்து வைத்து உத்தரவிட்டார் மாவட்ட பதிவாளர்.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் தேர்தலை மட்டும் நடத்த அனுமதி அளித்தது. ஆனால், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில் தான் 2019 ஜூன் 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

மேலும் நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தைக் கவனிக்க பதிவுத் துறை உதவி ஐஜி கீதாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

மேலும் பெஞ்சமின், ஏழுமலை ஆகியோர் நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் எங்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை.

வெளியூர்களில் இருக்கும் உறுப்பினர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கான படிவம் கொடுக்கப்படவில்லை எனவே இத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் அனைத்து வழக்குகளையும் விசாரித்த நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

அதில், “கடந்த ஆண்டு ஜூன் 23-ம் தேதி நடத்தப்பட்ட தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. 3 மாதத்துக்குள் வாக்காளர் பட்டியல் தயாரித்து தேர்தலை நடத்த வேண்டும்.

இத்தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமிக்கப்படுகிறார். மறுதேர்தல் நடத்தி முடிக்கும் வரை நடிகர் சங்க நிர்வாகத்தை அரசு நியமித்த சிறப்பு அதிகாரியான கீதா நிர்வகிப்பார்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை ஐசரி கணேஷ், பாக்யராஜ் உள்ளிட்ட சங்கரதாஸ் சுவாமிகள் அணியினர் வரவேற்றுள்ளனர்.

ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நாசர், விஷால் அணியினர் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி வரும் திங்கள் கிழமை மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது