தொட்டு விடும் தூரம் திரை விமர்சனம்

நடிப்பு – விவேக் ராஜ், மோனிகா சின்னகொட்லா சிங்கம் புலி, ஜீவா ரவி, பாலா சரவணன் சிதா மற்றும் பலர்

தயாரிப்பு – உஷா சினி கிரியேஷன்ஸ், ரக்ஷாந்த் கிரியேஷன்ஸ்

இயக்கம் – நாகேஸ்வரன்

இசை – நோவா

மக்கள் தொடர்பு – வெங்கட்

வெளியான தேதி – 3 ஜனவரி 2020

ரேட்டிங் – 2.5/5

தமிழ் திரைப்பட உலகில் இன்னும் சொல்லப்படாத காதல் கதைகள் நிறைய இருக்கின்றன என்று சொல்வார்கள். அந்த விதத்தில் இந்தப் படத்தின் கதையும் சொல்லப்படாத ஒரு கதையாகத்தான் இருக்கிறது.

அறிமுக இயக்குனர் நாகேஸ்வரன் படத்தின் முடிவில் ஒரு நெகிழ்வான கருத்துடன் படத்தை முடித்து கொஞ்சம் பரபரப்பான காதல் கதையாக இப்படத்தைக் கொடுத்திருக்கிறார்.
அறிமுக இயக்குனர் நாகேஸ்வரன்

நாகர்கோவில் அருகில் உள்ள கிராமத்தில் மெடிக்கர் ரெப் ஆக இருப்பவர் எஞ்சினியரிங் முடித்த கதாநாயகன் விவேக் ராஜ். அந்த கிராமத்திற்கு சென்னையிலிருந்து என்எஸ்எஸ் கேம்ப் வந்துள்ள கல்லூரி மாணவிகளில் கதாநாயகி மோனிக்காவும் ஒருவர். விவேக்கின் நல்ல குணத்தைப் பார்த்து காதலில் விழுகிறார்

கதாநாயகி மோனிகா. சென்னை சென்றதும் கதாநாயகன் விவேக்கிற்காக ஒரு நல்ல வேலை பார்த்துத் தருவதாகச் சொல்கிறார்.

சில நாட்கள் கழித்து கதாநாயகன் விவேக் ராஜ் சென்னை செல்கிறார். செல்லும் வழியில் கதாநாயகி மோனிகாவிற்கு திருமணம் நடந்த விவரம் தெரிகிறது. அதோடு, அவருடைய மொபைல் போனும் தொலைந்து விடுகிறது. ஆனால், கதாநாயகி மோனிகாவின் திருமணம் நின்று விடுகிறது. கதாநாயகி மோனிககாவால் கதாநாயகன் விவேக்கைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. காதலர்கள் மீண்டும் சந்தித்தார்களா இல்லையா என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக் கதை.

இஞ்சினியரிங் முடித்துவிட்டு, கிராமத்தில் இருந்தாலும் மெடிக்கல் ரெப் வேலை பார்ப்பவராக கதாநாயகன் விவேக் ராஜ். அவருடைய கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாகவே நடித்திருக்கிறார். காதலியைப் பார்க்க முடியாமல் தவிக்கும் தவிப்பை யதார்த்தமாய் வெளிப்படுத்தி இருக்கிறார். சண்டைக் காட்சிகளில் அவரை ஆக்ஷனிலும் ஜொலிக்க வைத்திருக்கிறார் சண்டைப் பயிற்சி இயக்குனர்.

பணக்கார வீட்டுப் பெண்ணாக இருந்தாலும் நல்ல குணம் படைத்த கல்லூரி மாணவியாக கதாநாயகி மோனிகா சின்னகொட்லா. கதாநாயகன் விவேக்கின் ஆர்கன் டொனேஷன் பேச்சைக் கேட்டு உடனே காதலிக்க ஆரம்பிப்பது சினிமாத்தனமாக உள்ளது. பின்னர் காதலனைக் காணத் தவிப்பதில் நிறைவாய் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் விவேக்கின் அம்மாவாக சீதா, அவ்வளவு பாசமானவராக அவரைக் காட்டியிருக்கிறார்கள். சிங்கம்புலி நகைச்சுவை படத்தில் எடுபடவில்லை. வில்லன் ராஜசிம்மன் எதையோ செய்யப் போகிறார் என்று பார்த்தால் அடி வாங்கியபின் ஆளையே காணவில்லை. பாலசரவணன் ஓரிரு காட்சிகளில் வந்ததோடு சரி.

அறிமுக இசையமைப்பாளர் நோவா இசையில் சில பாடல்கள் கேட்கும் ரகம். குறிப்பாக பூக்கள் காதல் மொழி பாடலும், அதைப் படமக்கிய விதமும் இனிமை.

வளரும் நடிகர்களை வைத்துக் கொண்டு ஓரளவிற்கு ரசிக்கும்படியான படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் நாகேஸ்வரன்.

நாயகியை நாயகனோ அல்லது நாயகனை நாயகியோ சந்திக்கப் போகும் இடைவெளிக்கான தூரம்தான் இந்த தொட்டு விடும் தூரம். நாயகன் விவேக்கின் போன்தான் காணவில்லை, அதனால், அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால், நாயகனின் அம்மா சீதாவிற்கு போன் செய்து விவேக்கைப் பற்றிய தகவலை நாயகி மோனிக்கா கேட்டிருக்கலாமே?.

கிளைமாக்சை இந்த அளவிற்கா சோகமாக அமைக்க வேண்டும். இருந்தாலும் அதில் ஒரு நல்ல விஷயத்தை சொன்னதற்காக இயக்குனரை தாராளமாகப் பாராட்டலாம்.

தொட்டு விடும் தூரம் – முயன்றால் முடியாததில்லை