தொரட்டி வெற்றியைத் தொடர்ந்து த்ரிஷா, பார்த்திபன் படங்களை வெளியிடும் ‘SDC’ பிக்சர்ஸ்

சில தினங்களுக்கு முன் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்ட படம் ‘தொரட்டி’. கமர்ஷியலாக எவ்வித லாபத்தை கொடுத்து விடாது என்று தெரிந்தும், சினிமா ரசிகர்களுக்கு மட்டுமல்லாது மக்களுக்கு நல்ல ஒரு வாழ்வியலை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படத்தை வாங்கி வெளியிட்டது ‘SDC’ பிக்சர்ஸ் நிறுவனம்.

மக்கள் கொடுத்த வரவேற்பை அடுத்து இந்நிறுவனம் தொடர்ச்சியாக பல படங்களை வெளியிட முன்வந்துள்ளது.

சுந்தர்பாலு இயக்கத்தில் த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் படம் தான் ‘கர்ஜனை’. இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் தமிழக வெளியிடும் உரிமையையும் எஸ் டி சி பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது.

படத்தினை பார்த்த ஏரியா விநியோகஸ்தரர்கள் பலர், இப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். மேலும், சரியான திட்டமிடலோடு, சரியான தினத்தில் படத்தை ரிலீஸ் செய்தால், இவ்வருடத்தின் சிறந்த படமாக இது இருக்கும் எனவும் கூறியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், ’கயல்’சந்திரன், பார்த்திபன் நடிப்பில் உருவாகி வரும் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ என்ற படத்தின் வெளியீட்டு உரிமையையும் இந்நிறுவனமே கைப்பற்றியுள்ளது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல படங்களை வெளியிட ‘SDC’ பிக்சர்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாம்.