தொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் Gamata Tech தளமேடை அறிமுகம்

இலங்கையின் அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கியவாறு இளம் தொழில்நுட்ப தொழில் முயற்சியாளர்களால் முன்னெடுக்கப்படுகின்ற ஒரு விரைவுபடுத்தல் தளமேடையான Gamata Technology என்ற செயற்திட்டமொன்று தொழிநுட்பம் ஊடாக சமூகங்களை மேம்படுத்தும் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நெலும் பொக்குண மஹிந்த ராஜபக்ஷ அரங்கத்தில் அண்மையில் வைபவரீதியாக இடம்பெற்றது.

இலங்கையில் 19 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் இளம் தொழில் முயற்சியாளர்கள், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், புகழ்பெற்ற பிரபலங்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் என பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கையில் பல ஆண்டுகளாக தொழில்நுட்பவியல் பாவனை தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றின் அடிப்படையிலேயே Gamata Tech எண்ணக்கரு கட்டியெழுப்பப்பட்டுள்ளது. போதிய அறிவின்மை மற்றும் வலுவூட்டலின்மை காரணமாக இளைஞர், யுவதிகளில் பெரும் பங்கினர் எவ்வாறு தொழில்நுட்பத்தை துஸ்பிரயோகம் செய்கின்றனர் என்பதை இவ்வாய்வு புலப்படுத்தியுள்ளது.

மறுபுறத்தே, அரசாங்க அலுவலர்கள் மற்றும் ஏனைய தரப்பினர் மத்தியில் போதிய தொழில்நுட்ப அறிவின்மையும் அதன்மூலம் வெளிப்பட்டுள்ளது. ஆகையால் பெறப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக, தமது பலங்களை மேம்படுவதற்கும், தமது புத்தாக்கச் சிந்தனைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் போதுமான தளமேடையைக் கொண்டிராத கிராமப்புறங்களிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு வளர்ச்சி வாய்ப்புக்களுக்கான வழிமுறைகளை இதன் ஸ்தாபகர்கள் வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

I.C.A.Advertising புத்தாக்கமாக அறிமுகப்படுத்தப்பட்டு, கிராமப்புறங்களில் தொழில்நுட்பரீதியான புரட்சிக்கு வலுவூட்டுகின்ற பல்வேறு புத்தாக்க மொபைல் செயலிகளும் இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையின் கிராமப்புறங்களிலுள்ள இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு கிடைக்கப்பெறுகின்ற பல்வேறு வாய்ப்புக்கள் தொடர்பான அறிவூட்டல் சார்ந்த பல்வேறு கலந்துரையாடல் நிகழ்வுகளும் இங்கு இடம்பெற்றன.

இலங்கையில் கிராமப்புற தொழில் முயற்சியாண்மை, தொழில்நுட்பத்தின் வலுவூட்டப்பட்ட சமுதாயத்தின் பொறுப்புணர்வு, இலங்கையில் தொழில் முயற்சியாண்மையின் தேவைக்கான காரணங்கள், சமூக தொழில் முயற்சியாண்மை மற்றும் கிராமப்புற தொழில் முயற்சியாண்மை சார்ந்த ஏனைய விடயங்களும் கலந்துரையாடலில் அடங்கியிருந்ததுடன், அவை தொடர்பான வாய்ப்புக்கள் மற்றும் சவால்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.