நடிகை நயன்தாராவால் தாமதமாகும் மலையாளப் படம்

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருபவர் நயன்தாரா
தென்னிந்திய திரைப்படங்களில் தனது முத்திரையை பதித்து, கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருபவர் நயன்தாரா. இவர் பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்ட நிலையில், மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் நிவின்பாலியுடன் இணைந்தும் ஒரு படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்திற்கு ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை பிரபல இயக்குனரும், இளம் நடிகருமான வினித் சீனிவாசனின் தம்பி தயன் சீனிவாசன் இயக்குகிறார். இது அவரது முதல் படமாகும். நகைச்சுவை நடிகரான அஜூ வர்கீஸ் தயாரிக்கிறார்.

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு முக்கால்வாசி முடிவடைந்து விட்ட நிலையில் இன்னும் 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கிறதாம். ஆனால் இந்தப் படத்திற்கு கொடுத்த தேதியில் சிலவற்றை மாற்றம் செய்து, ரஜினிகாந்த் மற்றும் விஜய் படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து விட்டாராம் நயன்தாரா. இதனால் கோடை விடுமுறைக்கு வர வேண்டிய படம் தள்ளிப்போய் உள்ளது.

தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் ஆகிய மூவரிடமும் நட்பு ரீதியாக இதற்காக மன்னிப்பு கோரியுள்ள நயன்தாரா, இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக சொல்லியுள்ளாராம். எனவே ஓணம் பண்டிகைக்காவது படத்தை வெளியிட்டு விட வேண்டும் என்று படக்குழுவினர் முயற்சி செய்து வருகிறார்களாம்.