நடிகை நயன்தாராவின் மாமாவாக நடிக்க தயார் – பிரபல ஹாலிவுட் நடிகர் ட்வீட்

பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் தர்பார் படத்தில் நடிக்க வாய்ப்பு தருமாறு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

பேட்ட படத்தை அடுத்து ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தர்பார். 2.0 படத்தை அடுத்து மீண்டும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது.

11 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாகிறார் நயன்தாரா. பேட்ட படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்த அனிருத், தர்பார் படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். பேட்ட படத்தில் ரஜினிக்கு ஆடைவடிவமைப்பாளராக பணியாற்றிய நிஹாரிகா பசின்கான் இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளார்.

மேலும், தர்பார் படத்தில் ரஜினிகாந்த் 2 வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஒரு கதாபாத்திரம் மும்பையை மிரட்டும் ரவுடிகளை சுட்டுத்தள்ளும் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரியாக சித்தரித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இன்னொரு வேடம் பாட்ஷா போன்று தாதாவாக இருக்கலாம் என்று பேசப்படுகிறது. இந்த கதாபாத்திரத்தின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார் என்ற தகவல் கோலிவுட் வட்டாரங்களில் வெளியாகியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறு என்று படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்

இந்நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் ஹாலிவுட் நடிகரும், இயக்குநருமான பில் ட்யூக் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

அதில், “முருகதாஸ். எனக்கு தமிழ் தெரியாது. ஆனால் என்னால் ரஜினிகாந்தின் அமெரிக்க உறவினராகவோ, நயன்தாராவின் மாமாவாகவோ இருக்க முடியும். எல்லோரும் என்னால் நடிக்க முடியும் என்று சொல்கிறார்கள். ஸ்ரீகர் பிரசாத்தும், சந்தோஷ் சிவனும் நான் நடித்த காட்சிகளை நன்றாக எடிட் செய்ய முடியும். ஏன் இசையமைப்பாளர் அனிருத் கூட உலகம் முழுவதும் இருக்கும் நட்சத்திர நடிகர்களை வைத்து ஒரு ஹிட் பாடல் கொடுக்கலாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என்று ஏ.ஆர்.முருகதாஸை டேக் செய்து ட்வீட் செய்துள்ளார்.

இதுகுறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ள இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், “சார். நிஜமாகவே நீங்கள் தானா” என்று அவரை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/ARMurugadoss/status/1139162276576059392?s=19