நடிகை ஸ்ரீதேவி உடல் தகனம்

உறவினர் திருமண  நிகழ்ச்சிக்காக துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த சென்ற பிப்ரவரி மாதம் 24ம் தேதி மரணமடைந்தார். ஓட்டல் அறையின் பாத்ரூமில் உள்ள குளியல் தொட்டியில் மூழ்கியதால் உயிரிழந்ததாக தடயவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, அவரது கணவர் போனி கபூரிடம் துபாய் போலீசார் விசாரணை செய்தனர்.

விசாரணைக்கு பின்னர்  அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க போலீசார் அனுமதி அளித்தனர். இதனை அடுத்து, அவரது உடல் எம்பால்மிங் செய்யப்பட்டு தனி விமானம் மூலம்  மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து, அந்தேரி மேற்கு லோகண்ட்வாலா கிரீன் ஏக்கர்ஸ் அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து வரப்பட்ட உடலை பார்த்த ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அவர்களை உறவினர்கள் தேற்றினர். ஸ்ரீதேவியின் உடலுக்கு குடும்பத்தினர் சடங்குகளை செய்தனர்.

பின்னர் அவரது உடல் அப்பகுதியில் உள்ள செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் ஸ்ரீதேவியின் உடலுக்கு தங்களது கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர். மாநில அரசு சார்பில் அரசு மரியாதை அளிக்கப்பட்ட பின்னர், அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. மூவர்ணக்கொடி போர்த்தப்பட்ட அவரது உடல் வாகனத்தில் செல்ல, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் சோகத்துடன் பின்தொடர்ந்து வந்தனர்.

மும்பை வில்லேபார்லே மேற்கு பவன்ஹன்ஸ் அருகே உள்ள மின்சார மயானத்தை அவரது உடல் வந்தடைந்ததும் சம்பிராதயப்படி இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன. மாலை சுமார் 6 மணியளவில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.