நயன்தாரா காதலனுக்கு ஆஸ்கர் விருது ஆசை

ஆண்டாண்டு காலமாக கோலிவுட் முன்னணி நட்சத்திரங்கள், இயக்குனர்களுக்கு ஆஸ்கர் விருது வெல்லும் கனவு உண்டு. அந்த கனவை நனவாக்கியவர் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். ‘ஸ்லம்டாக் மிலினர்’ ஹாலிவுட் படத்துக்கு இசை அமைத்து சிறந்த இசை மற்றும் பின்னணி இசை என 2 பிரிவில் விருதுகளை அள்ளி வந்தார் ரஹ்மான். அதன்பிறகு சில தென்னிந்திய படங்கள் ஆஸ்கர் கதவை தட்டிவிட்டு திரும்பின. 2019ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

‘கிரீன் புக்’, ‘ரோமா’, ‘பிளாக் பாந்தர்’ ஆகிய திரைப்படங்கள் ஆஸ்கர் விருதினை அள்ளின. இந்த நிலையில் கோலிவுட் இயக்குனரும், நடிகை நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் தனது ஆஸ்கர் கனவை வெளியிட்டிருக்கிறார். ஆஸ்கர் விருது அரங்கிற்குள் செல்வதற்கான கதவு அருகே நின்றபடி ஒரு படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் விக்னேஷ் சிவன், தனக்கும் ஒருநாள் ஆஸ்கர் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிடும்போது, ‘எனக்கும் ஒருநாள் கதவு திறக்கும், அருகில் இருப்பதே நமது வேலை’ என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆஸ்கர் விருது பெற்ற கலைஞர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவனின் கனவு பலிக்க ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் அதே வேளையில் ஆஸ்கர் வேண்டுமென்றால் நீங்கள் ஹாலிவுட் படம் இயக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்துள்ளனர்.