நயன்தாரா நடிக்கும் ‘கொலையுதிர் காலம்’ படத்திற்கு இசையமைப்பாளர் யார் ?, இன்னும் வராத தகவல்

2016ம் ஆண்டு இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவின் முதல் தயாரிப்பு என நயன்தாராவின் பிறந்தநாளான நவம்பர் 18ம் தேதியன்று ‘கொலையுதிர் காலம்’ என்ற படத்தின் அறிவிப்பு ஒரு போஸ்டருடன் வெளியானது. கருப்பு வெள்ளை புகைப்படத்தில் நயன்தாராவின் வித்தியாசமான தோற்றத்துடன் இருந்த அந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. முழு படப்பிடிப்பையும் லண்டனில் எடுத்து முடித்தார்கள். அப்படி ஒரு படப்பிடிப்பு நடந்த விஷயம் கூட வெளியில் அதிகம் தெரியவில்லை.

அதன்பின் படத்தின் இசை வெளியீடு நடந்த போது அந்த நிகழ்வில் ராதாரவி பேசி பரபரப்பு ஏற்படுத்திய பிறகுதான் இந்தப் படம் பற்றிய தகவல் வெளியில் தெரிய வந்தது. அப்போதுதான் இந்தப் படத்தின் தயாரிப்பிலிருந்தே யுவன்ஷங்கர் ராஜா வெளியேறிய விஷயமும், படத்திற்கு அவர் இசையமைக்கவில்லை என்ற விஷயமும் வெளிச்சத்திற்கு வந்தது. ஒற்றை வரியில், ‘கொலையுதிர் காலம்’ படத்தின் இசை நானில்லை’ என அவர் டுவீட் செய்தார்.

ஜுன் 14ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் இன்றைய விளம்பரம் வரையிலும் படத்தின் இசையமைப்பாளர் யார் என்று குறிப்பிடப்படவில்லை. திகில் படம் என்பதால் ஒருவேளை பின்னணி இசையே இல்லாமல் அமைதியாக ரசிகர்களை பயமுறுத்துகிறார்களோ…?.