நாடோடிகள் 2 – திரை விமர்சனம். ரேட்டிங் – 3./5

நடிப்பு – சசிகுமார், அஞ்சலி, அதுல்யாரவி பரணி
மற்றும் பலர்

தயாரிப்பு – மெட்ராஸ் என்டர்பிரைசஸ்

இயக்கம் – சமுத்திரக்கனி

இசை – ஜஸ்டின் பிரபாகரன்

மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

வெளியான தேதி – 31 ஜனவரி 2020

ரேட்டிங் – 3./5

 

 

இயக்குனர் நடிகர் சமுத்திரக்கனி இயக்கத்தில், சசிகுமார், விஜய் வசந்த், பரணி, அனன்யா மற்றும் பலர் நடித்து 2009ல் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் நல்லதொரு வெற்றியைப் பெற்றது. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார்கள். இயக்குனர் சமுத்திரக்கனி

முதல் பாகத்தில் தங்களது நண்பனின் காதலுக்காக போராடிய நண்பர்களைப் பற்றிய கதையை பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் சொல்லி ரசிக்க வைத்தார் இயக்குனர் சமுத்திரக்கனி.

இந்த இரண்டாம் பாகத்தில் தான் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் காதலுக்காக தன் வாழ்க்கையைத் தியாகம் செய்து அந்தப் பெண்ணை காதலனுடன் சேர்த்து வைக்கப் போராடும் கதாநாயகனைப் பற்றிய கதையைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சமுத்திரக்கனி.

கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டராக இருப்பவர் கதாநாயகன் சசிகுமார். அடிக்கடி தெருமுனைப் போராட்டங்களை நடத்துபவர். சாதியற்றவர்கள்.

என ஒரு அமைப்பைத் துவக்கி சாதிக்கு எதிராக பெரிய மாநாடு நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும், சாதி பேதம் இல்லாமல் இருக்க வேண்டும் என நினைக்கிறார்.

அவருக்கு உற்ற தோழர்களாக டாக்டராக இருக்கும் கதாநாயகி அஞ்சலி, நண்பன் பரணி, வயதான மூத்தவர் ஆகியோர் இருக்கிறார்கள். திருமணத்திற்காகப் பல பெண்களைத் தேடிய பிறகு அதுல்யா ரவி, கதாநாயகன் சசிகுமாரைத் திருமணம் செய்து கொள்கிறார்.

ஆனால், அவர்களது முதலிரவு அன்று பிளேடால் கைகளைக் கிழித்துக் கொண்டு தன் காதலைப் பற்றி கதாநாயகன் சசிகுமாரிடம் சொல்கிறார்.

தன்து காதலனைக் கொன்று விடுவதாகச் சொன்னதால்தான் நமது திருமணத்திற்கு சம்மதித்தேன் என்கிறார்.

நண்பர்களுடன் ஆலோசித்த பின் அதுல்யாவை அவரது காதலனுடன் வெளியூருக்கு அனுப்பிவிடுகிறார் கதாநாயகன் சசிகுமார். விஷயம் அறிந்த சாதி வெறி பிடித்த அதுல்யாவின் குடும்பத்தினர் கதாநாயகன் சசிகுமாருடன் சண்டைக்கு வருகிறார்கள்.

ஆரம்பத்திலிருந்தே கதாநாயகன் சசிகுமாருடன் மோதி வரும் சாதி சங்கத் தலைவர், அதுல்யா குடும்பத்தையும், தன் சாதியினரையும் தூண்டி விடுகிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக் கதை.

கதாநாயகன் சசிகுமாருக்கு டெய்லர் மேட் கதாபாத்திரம். அந்தக் கதாபாத்திரத்துக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை அப்படியே பொருத்தமாக செய்துவிடுகிறார்.

இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கும் படமாச்சே, நிறைய அட்வைஸாக பேசுவாரோ என எதிர்பார்த்தால் நல்ல வேளையாக அப்படியெல்லாம் அதிகம் பேசவில்லை. தேவையான இடங்களில் மட்டும் நறுக்கென்று பேசுகிறார்.

எம்.டி. படிப்பு படித்து டாக்டராக இருக்கும் கதாநாயகி அஞ்சலி, மெரினா, பிக் பாஸ் ஜுலி அளவிற்கு இறங்கி போராடுவது ஆச்சரியமாக உள்ளது.

ஆரம்பத்தில் அவரைக் காட்டும் போது தியேட்டரில் அப்படி சிரிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் கதாநாயகி அஞ்சலியையும், கதாநாயகன சசிகுமாரையும் காதலில் விழ வைக்க அந்தப் பெரியவர் போடும் திட்டம் சூப்பராக உள்ளது.

உற்ற தோழனாக திரைப்பட முழுவதும் வருகிறார் பரணி. நாடோடிகள் படத்திற்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் தான் பெயர் வாங்குகிறார். அவர்களுடனேயே இருக்கும் அந்தப் பெரியவரும் யதார்த்தமாய் நடித்திருக்கிறார்.

அதுல்யா வழக்கம் போல நடிக்க முயற்சித்திருக்கிறார். ழ வரும் வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என யாராவது அவருக்கு வகுப்பெடுக்க வேண்டும். இயக்குனர் சமுத்திரக்கனி திரைப்படத்தில் கூட அவர் இப்படி தமிழ் உச்சரிப்பு செய்வது ஆச்சரியம்தான்.

கதாநாயகன் சசிகுமாரின் அம்மாவாக துளசி, தாய்மாமனாக ஞானசம்பந்தம், நாட்டு நடப்புக்களை சாலையில் கூவிக் கொண்டே செல்லும் இயக்குனர் மூர்த்தி ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

நாடோடிகள் படத்தின் ஹைலைட்டை சம்போ சிவசம்போ பாடல்தான் அப்படி ஒரு பாடலை இந்தப் படத்தில் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனால் உருவாக்க முடியவில்லையா என்ன?.

மீண்டும் அந்தப் பாடலையே பயன்படுத்தி இருக்கிறார்கள். மற்ற பாடல்கள் பரவாயில்லை ரகத்தில் கூட இல்லாதது ஆச்சரியம்தான்.

ஆரம்பத்தில் திரைப்படம் அரசியல் கதையாக இருக்குமோ என்று யோசிக்க வைக்கிறது. அதன் பின் திருப்பமாகி திருமணம், காதல், சாதி மோதல் என பரபரப்பை ஏற்படுத்துகிறது. இருந்தாலும் முதல் பாகத்தில் இருந்த ஒரு உணர்வு இந்த இரண்டாம் பாகத்தில் மிஸ்ஸிங். முதல் பாகம் மனதிற்கு மிக நெருக்கமாய் அமைந்தது, இரண்டாம் பாகத்தை ஒரு படமாக மட்டுமே பார்க்க முடிகிறது.

நாடோடிகள் 2 – நாட்டுக்குத் தேவையான திரைப்படம்