நானும் விமலும் இணைந்தாலே அது வெற்றி தான் ; களவாணி 2 வெற்றிக்கு நன்றி கூறிய சற்குணம்.!
பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான களவாணி திரைப்படம். அந்த படத்தின் இயக்குனர் சற்குணம், நாயகன் விமல் மற்றும் நாயகி ஓவியா ஆகியோருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.. அதுமட்டுமல்ல அந்த படத்தில் நடித்த பல நடிகர், நடிகைகளுக்கும் அந்த படம் மிகப்பெரிய புகழ் வெளிச்சம் தந்தது..
இந்த நிலையில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்த படத்தின் இரண்டாம் பாகமாக கடந்த வாரம் களவாணி 2 திரைப்படம் அதே சற்குணம், விமல், ஓவியா என்கிற கூட்டணியில் உருவாகி மீண்டும் ஒரு வெற்றியை ருசித்துள்ளது.
முதல் பாகத்தில் இடம்பெற்ற இளவரசு, சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு மற்றும் இந்த படத்தில் புதிதாக சேர்ந்துள்ள துரை சுதாகர், ராஜ்மோகன், விக்னேஷ் காந்த் என கலகலப்பான கதாபாத்திரங்களுடன் மக்களுக்கு மீண்டும் ஒரு விருந்தை பரிமாறி உள்ளது களவாணி 2.
இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கான நன்றி அறிவிப்பு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.. நட்புக்காக இந்த நிகழ்ச்சியை சுவாரசியமாக தொகுத்து வழங்கினார் ரோபோ சங்கர்..
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் இளவரசு பேசும்போது,
இந்த படத்தில் வில்லனாக நடித்த துரை சுதாகர் பேசும்போது,
“நான் நடிக்க வந்து கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் ஆகின்றன. இவ்வளவு நாள் கஷ்டப்பட்டதற்கு எனக்கு இந்த வெற்றிப்படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுத்து ஒரு நல்ல களம் அமைத்துக் கொடுத்து என்னை ஒரு நடிகனாக நிலை நிறுத்தி இருக்கிறார் இயக்குனர் சற்குணம்.. விமல், ஓவியா நடித்து வெற்றி பெற்ற களவாணி படத்தை ஒரு ரசிகனாக பார்த்து ரசித்த எனக்கு அதன் இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றே சொல்வேன்.. பத்து படத்தில் நடித்து இருந்தால் கூட இந்த அளவிற்கு எனக்கு ஒரு நல்ல அறிமுகம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் தான்.. இயக்குனர் சற்குணம் மட்டுமல்லாது, இளவரசு, சரண்யா பொன்வண்ணன் இருவருமே என்னை ஊக்கப்படுத்தினார்கள்.. படத்தில் நான் வில்லன் என்றாலும் கதையை பொறுத்தவரைக்கும் நான் தான் ஹீரோ.. நிறைய பேர் படம் பார்த்து விட்டு வெளியே செல்லும் போது என் மீது பரிதாபப்பட்டுக் கொண்டே சென்றார்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் தேர்தலில் நான் போட்டியிட்டால் இந்த அனுதாப அலை மூலம் ஜெயித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என கூறினார்.
வினியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன் பேசும்போது,
“விமல் படங்கள் என்றாலே தயாரிப்பில் இருந்து வெளியீடு வரை எனது பங்களிப்பு இருக்கும். இந்த நிகழ்ச்சியில் வைத்து விமலை சந்தித்து தங்களது அடுத்த படத்திற்கு அட்வான்ஸ் கொடுப்பதற்காக தயாரிப்பாளர்கள் தேடி வந்துள்ளார்கள். அந்த அளவிற்கு விமலின் மார்க்கெட் சீராக உள்ளது.. முன்னனி நடிகர்கள் சிலரின் படங்களே சேனல்களில் விலைபோகாமல் இருக்கும் நிலையில் களவாணி 2 படத்தின் ஒலிபரப்பு உரிமையை ஜீ தமிழ் சேனல் இரண்டரை கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்கள் என்றால் இது மிகப்பெரிய விஷயம்… இந்த பத்து வருடங்களில் நான் ஓரளவுக்கு லாபம் சம்பாதித்தேன் என்றால் அது இந்த களவாணி 2 படத்தின் மூலமாகத்தான்.. இதையடுத்து விமல் நடிக்கும் புதிய படத்தை நானும் இசையமைப்பாளர் ஜான் பீட்டரும் இணைந்து தயாரித்து வருகிறோம்” என கூறினார்
இயக்குனர் சற்குணம் பேசும்போது,
“களவாணி போன்ற ஹிட் படத்தை கொடுத்து விட்டு அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து மக்களை திருப்திப்படுத்துவது என்பது மிகவும் சவாலான விஷயம்.. ஆனால் களவாணி 2 படத்திற்கும் மக்கள் ஏகோபித்த ஆதரவை வழங்கியுள்ளார்கள்.. அந்த வகையில் மக்களுக்கும், படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.. எனக்கும் விமலுக்கும் ஒரு ராசி உண்டு.. நாங்கள் இருவரும் இணைந்த களவாணி, வாகை சூடவா, விமலை வைத்து நான் தயாரித்த மஞ்சப்பை, இப்போது களவாணி 2 என அனைத்து 4 படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்து விட்டன.. எங்கள் கூட்டணிக்கு தோல்வியே இல்லை.. களவாணி இரண்டாம் பாகம் எடுக்கிறோம் என்றதுமே உடனே ஒப்புக் கொண்ட ஓவியாவுக்கும் நன்றி.. அதுபோல முதல் பாகத்தில் முக்கிய தூண்களாக உதவிய இளவரசு, சரண்யா பொன்வண்ணன் இருவருமே இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்து விட்டார்கள்.. குறிப்பாக இளவரசு சார் பல சமயங்களில் என்னை தன் தம்பியாக நினைத்து உற்சாகப்படுத்தி ஊக்கம் தந்து வருகிறார்.. அதேபோல இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு மிகப்பெரிய வெற்றி பெறும் என்று அடித்துச் சொன்னார் சரண்யா பொன்வண்ணன்.. அது இன்று பலித்திருக்கிறது..
இந்த படத்தில் வில்லனாக நடித்த துரை சுதாகர் மீது ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரத்தை அவர் தாங்குவாரா என்கிற சந்தேகம் இருந்தது… ஆனால் போகப்போக அந்த கதாபாத்திரத்திற்காக அவர் எவ்வளவு மெனக்கெட்டார் என்பதை பார்த்தபோது ஆச்சரியம் ஏற்பட்டது.. குறிப்பாக கிளைமாக்ஸில் அவர் பேசும் வசனத்தால் ரசிகர்களிடம் பரிதாபத்தை அள்ளிவிட்டார்… எனக்கு தெரிந்து உதிரிப்பூக்கள் படத்திற்கு பிறகு வில்லன் மீது ரசிகர்கள் பரிதாபப்பட்டது இந்தப் படமாகத்தான் இருக்கும்.. இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராஜ்மோகன் நடிப்பை பார்த்து என் மனைவியே ஆச்சரியப்பட்டு மிகவும் பொருத்தமான நபரை தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள் என கூறினார்.. அந்த அளவுக்கு நடிப்பிலும் சரி, ரிலீஸ் நேரத்தின்போது ஏற்பட்ட சிரமங்களிலும் சரி.. எனக்கு ஒரு சகோதரர் போல உறுதுணையாக நின்றவர் ராஜ்மோகன்” என கூறினார்..
அடுத்ததாக நாயகன் விமல் பேசியபோது,
“இந்த படத்தின் ரிலீஸ் நேரத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் உதவிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.. நான் கேரளாவில் இன்னொரு படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் என்னால் அந்த நேரத்தில் இங்கே கூடவே இருந்து கவனிக்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது.. இந்த அளவுக்கு போராடி இரவு முழுவதும் கண்விழித்து இந்த படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.
நல்ல கதை அமைந்தால் களவாணி 3 ஆம் பாகத்திலும் நடிக்க ஆவலாக இருக்கிறேன்.. அது இன்னும் 10 வருடம் கழித்தும் நடக்கலாம் அல்லது அடுத்த வருடமே நடந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.. இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு என்பது போன்ற படங்களில் இனி நடிக்க மாட்டேன்.. அந்த படம் படமாக்கப்பட்டதும் டைட்டில் வைக்கப்பட்டதும் எல்லாமே என் கையை மீறி நடந்த விஷயங்கள் என்பதால் அந்த படத்தில் இருந்து நிறைய பாடங்களை கற்றுக்கொண்டேன்..
நான் நடித்துள்ள கன்னிராசி படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது இதை தொடர்ந்து ஜான் பீட்டர்-சிங்காரவேலன் கூட்டணியில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறேன்.. தவிர மலையாளத்தில் திலீப் நடிப்பில் வெளியான மை பாஸ் என்கிற படத்தின் ரீமேக்காக உருவாகும் சண்டைக்காரி படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறேன்.. எனக்கு ஜோடியாக நடிகை ஸ்ரேயா நடிக்கிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் கேரளாவில் நடைபெற்று முடிந்தது” என கூறினார் விமல்.
நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில் வந்து கலந்துகொண்ட நாயகி ஓவியா, படக்குழுவினருகும் ஊடகங்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.