நான்கு வருடங்களுக்கு பிறகு வருகிறார் ஜீவன்

யுனிவர்சிட்டி படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜீவன். அதன் பிறகு அவர் காக்க காக்க படத்தில் வில்லனாக நடித்தார். அதுதான் அவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து அவர் நடித்த திருட்டுப்பயலே, நான் அவனில்லை படங்கள் வெற்றி படமாக அமைந்தது. ஆனால் அதன் பிறகு நடித்த மச்சக்காரன், தோட்டா, நான் அவனில்லை 2, அதிபர் படங்கள் தோல்வி படங்களாக அமைந்தன. அவர் நடித்த கிருஷ்ணலீலை ஜெயிக்கிற குதிர படங்கள் வெளிவரவில்லை.
இந்த நிலையில் ஜீவன் 4 ஆண்டுகளுக்கு பிறகு அசரீரி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பிக் பிரண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் தயாரிக்கிறார். புதுமுக இயக்குனர் ஜிகே இயக்குகிறார். நீரவ்ஷா உதவியாளர் மருதநாயகம் ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. படம் பற்றி இயக்குனர் ஜிகே கூறியதாவது:
அசரீரி ஒரு அறிவியல் புனைவு திரில்லர் படம். நமது கலாச்சாரத்துடன் மரபு ரீதியாக தொடர்பை கொண்ட புராண கதைகளின் குறிப்புகளை இது கொண்டிருக்கும். அது எவ்வாறு இன்றைய தொழில்நுட்ப உலகத்துடன் தொடர்புபட்டது என்பதையும் சொல்லும். 
எல்லாவற்றிற்கும் மேலாக, அறிவியல் எவ்வாறு ஒரு குடும்பத்திற்குள் ஒரு உணர்ச்சி போராட்டத்தை உருவாக்குகிறது என்பதை மையமாகக் கொண்டது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற பார்வையாளர்களை மனதில் வைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறோம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இதை ரசிப்பார்கள், குறிப்பாக தம்பதிகள் இந்த படத்துடன் தங்களை இணைத்துக் கொள்ள முடியும். என்றார்.