நான் சிரித்தால் திரை விமர்சனம். ரேட்டிங் – 2./5

நடிப்பு – ஹிப்ஹாப் தமிழா, ஐஸ்வர்யா மேனன், கே.எஸ்.ரவிக்குமார் படவா கோபி மற்றும் பலர்

தயாரிப்பு – அவ்னி மூவீஸ்

இயக்கம் – இராணா

இசை – ஹிப்ஹாப் தமிழா

மக்கள் தொடர்பு – ஜான்சன்

வெளியான தேதி – 14 பிப்ரவரி 2020

ரேட்டிங் – 2./5

ஒரு திரைப்படத்தின் தலைப்பில் சிரிப்பு சம்பந்தமான வார்த்தை வந்துவிட்டால் அது படத்திலும் சிரிப்பு வரவழைத்துவிடும் என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டார்கள். படத்தைப் பார்த்துவிட்டு மக்கள் அனைவரும் சிரிப்பாய் சிரிக்காமல் இருந்தால் சரி.

நகைச்சுவைப் படங்களுக்கென்று தனி முத்திரை பதித்த இயக்குனர் சுந்தர்.சியின் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து இப்படி ஒரு சிரிப்பற்ற படமா என அதிர்ச்சிதான் வருகிறது.

அறிமுக இயக்குனர் ராணா என்ன சொல்ல வருகிறார் என்று அவருக்கே புரிந்திருக்காது போலிருக்கிறது. திரைப்படத்தில் கதையும் இல்லை, காமெடியும் இல்லை, படத்தில் ஒன்றுமில்லை.

இஞ்சினியரிங் அரியர்ஸ் வைத்திருந்தாலும் ஐ.டி நிறுவனத்தில் வேலையில் இருப்பவர் கதாநாயகன் ஹிப்ஹாப் ஆதி. அவர், அலுவலகத்தில் வேலை பார்க்கும் கதாநாயகி ஐஸ்வர்யா மேனனைக் காதலிக்கிறார். கம்பெனி பாஸிடம் ஏடாகூடமாகக் கேள்வி கேட்டதால் அவர், கதாநாயகன் ஹிப்ஹாப்
ஆதியை வேலையை விட்டு நீக்க முடிவு செய்கிறார். கதாநாயகன் ஹிப்ஹாப் ஆதி அவருடைய அரியர்ஸ் பேப்பரை கிளியர் செய்தால்தான் வேலை என்கிறார்கள்.

தேர்வு ஹாலில் கதாநாயகன் ஹிப்ஹாப்
ஆதிக்கு திடீரென சிரிக்கும் பழக்கம் வந்துவிடுகிறது. இதனிடையே, ஒரு குழப்பத்தில் தன்னைக் கொலை செய்ய கதாநாயகன் ஹிப்ஹாப்
ஆதி வந்திருப்பதாக பிரபல ரவுடி கே.எஸ்.ரவிக்குமார் நினைத்துக் கொள்கிறார்.

அதனால் சிறைக்கும் செல்கிறார். சிறையிலிருந்து தப்பிக்கும் கே.எஸ் ரவிக்குமார், கதாநாயகன் ஹிப்ஹாப்
ஆதியைக் கொல்ல முயற்சிக்கிறார். ஹிப்ஹாப்
ஆதி கே.எஸ் ரவிக்குமாரிடமிருந்து தப்பித்தாரா, வேலை நீக்கத்திலிருந்தும் தப்பித்தாரா என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக் கதை.

கதாநாயகனாக ஒரு இரண்டு படம் ஓடிவிட்டால் அடுத்தடுத்து என்ன சொன்னாலும் ரசிகர்கள் தன்னை ஏற்றுக் கொள்வார்கள் என ஹிப்ஹாப் ஆதி நினைத்துவிட்டாரோ என்ற சந்தேகம் வருகிறது. முந்தைய படங்களில் ஒரு இசையமைப்பாளராகவாவது ஓரளவிற்கு ரசிகர்களைக் கவர்ந்திருப்பார். இந்தப் திரைப்படத்தில் அது கூட இல்லை. சோகமான நேரங்களில் சிரிக்கும் பழக்கம் அவரது கதாபாத்திரத்திற்கு எந்த விதத்திலும் பலத்தைச் சேர்க்கவில்லை.

கதாநாயகி ஒருவர் வேண்டுமென்பதற்காக கதாநாயகி ஐஸ்வர்யா மேனன். ஹிப்ஹாப்
ஆதியை காதலிப்பதைத் தவிர வேறு வேலையில்லை. மற்றபடி சொல்லிக் கொள்ளும்படியாக இந்த திரைப்படத்தில் ஒன்றுமில்லை.

திரைப்படத்தின் வில்லனாக கே.எஸ்.ரவிக்குமார், ரவி மரியா. வில்லத்தனம் என்ற பெயரில் இரண்டு ரவிக்களும் நம் பொறுமையை மிகவும் சோதிக்கிறார்கள். கே.எஸ். ரவிக்குமாரைக் கூடக் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளலாம், ஆனால், ரவி மரியா, நம்மை மர்கயா பண்ணாமல் விட மாட்டார் போலிருக்கிறது.

மீசைய முறுக்கு அப்பா விவேக் கதாபாத்திரம் போலவே இந்தப் படத்திலும் ஒரு அப்பா கதாபாத்திரத்தில் படவா கோபி. இந்தப் படத்தில் நண்பர்களாக நடிப்பவர்களுக்குக் கூட எந்தவித முக்கியத்துவமும் இல்லை.

தடுக்கி விழுந்தால் பாட்டு வந்துவிடுகிறது. என்ன பாடுகிறார்கள், எதற்காக பாடுகிறார்கள் என்றே தெரியவில்லை. வழக்கம் போல பாடல்களில் அரைத்த மாவையே அரைத்திருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி.

திரைப்படத்தின் ரிசல்ட்டைப் பார்த்து தயாரிப்பாளர் ஹிப்ஹாப்
ஆதி போல சிரிக்காமல் இருப்பார் என நம்புவோம்.

நான் சிரித்தால் –
மக்கள் சிரிப்பாய் சிரித்தார்கள் எங்கே சிரிப்பு ?