நாளை மறுநாள் தென்னிந்தியநடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்க நிர்வாகிகள் தேர்தல் மூலம் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். 2015-ம் ஆண்டு அக்டோபர் 18-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத் தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களின் பதவிக்காலம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. அந்த சமயத்தில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், நடிகர் சங்கக் கட்டிட வேலைகள் நடைபெற்று வருவதால், தேர்தலை ஆறு மாதங்களுக்கு அப்போது தள்ளி வைத்தனர்.

தற்போது ஆறு மாத காலக்கெடுவும் முடிவடைந்து விட்டதால், தேர்தல் நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தற்போதைய தலைவரான நாசர் மீண்டும் போட்டியிடுவது உறுதியான நிலையில், அவரை எதிர்த்து யார் தலைமையிலான அணி களமிறங்க உள்ளது என்பது விரைவில் தெரிந்துவிடும்.

இந்நிலையில் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம், மே 14-ந்தேதி மாலை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்து விட்டதால், தேர்தல் குறித்து விவாதிப்பதற்காகவே இந்த அவசரக் கூட்டம் நடைபெற இருக்கிறது.