நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – திரை விமர்சனம்
நடிப்பு – ரியோ ராஜ், விக்னேஷ் காந்த், ஷெரின் காஞ்வாலா
தயாரிப்பு – சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – கார்த்திக் வேணுகோபாலன்
இசை – ஷபிர்
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா
வெளியான தேதி – 14 ஜுன் 2019
ரேட்டிங் – 2/5
தமிழ் சினிமாவில் காலம் காலமாக பல உதவி இயக்குனர்கள் இயக்குனர்களாக வேண்டும் என தயாரிப்பாளர் கிடைக்காமல், ஹீரோக்கள் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். எவ்வளவோ முயன்றும் வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவை விட்டே விலகி ஊருக்குப் போய் செட்டிலானவர்கள் நிறைய பேர்.
சில வருடங்களுக்கு முன்பு அப்படிப்பட்ட உதவி இயக்குனர்களின் இயக்குனர் வாய்ப்பை குறும் படங்கள் மூலம் நுழைந்து தட்டிப் பறித்தவர்கள் சிலர். ஆனால், குறும் படங்கள் மூலம் இயக்குனர்கள் ஆனவர்களால் அவர்களது இடத்தை நிலையாகத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.
இப்போது அதே உதவி இயக்குனர்களுக்குக் கிடைக்காத வாய்ப்புகள் யு டியுபில் சாதித்த சிலருக்கு படங்களை இயக்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது. அப்படி ஒரு வாய்ப்புதான் இந்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா. யு டியுபில் வீடியோ எடுப்பது வேறு, சினிமா எடுப்பது வேறு என்பது இந்தக் குழுவினருக்கு நன்றாகவே புரிந்திருக்கும்.
புதியவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்ற எண்ணத்தில் சிவகார்த்திகேயன் அவருடைய முதல் தயாரிப்பாக அற்புதமான கனா என்ற படத்தைக் கொடுத்தார். இந்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா குழுவினர் மீது எந்த நம்பிக்கையில் படத்தைக் கொடுத்தாரோ அந்த நம்பிக்கையை அவர்கள் காப்பாற்றத் தவறிவிட்டார். இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் சினிமாவில் அறிமுகமாகப் போகிறோம் என்பதை மிகவும் கவனமுடன் செய்திருக்க வேண்டும்.
ஆனால் அவர் அதை செய்யவில்லை
யு டியூப்பில் வீடியோ நிகழ்ச்சி செய்பவர்கள் ரியோ ராஜ், விக்னேஷ் காந்த். ஒரு பிரான்க் நிகழ்ச்சி நடத்தும் போது ராதாரவியுடன் பழக்கமாகிறார்கள். அவர்கள் இருவரையும் அழைத்து பேசும் ராதாரவி அவர்களுக்கு மூன்று டாஸ்க்குகள் தருவேன். அதை சரியாக முடித்தால் பெரும் தொகையைத் தருவேன் என்கிறார். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையில் இருக்கும் ரியோ, விக்னேஷ் அதற்கு சம்மதிக்கிறார்கள். முதல் டாஸ்க், இருவரும் பிரேக்கிங் நியூசில் வரவேண்டும். இரண்டாவது டாஸ்க், மனநலம் தவறிய ஒருவரை எம்எல்ஏ ஆக்க வேண்டும். இரண்டையும் அவர்கள் செய்து விடுகிறார்கள். மூன்றாவது டாஸ்க், நடக்கப் போகும் ஒரு கொலையைத் தடுக்க வேண்டும். அதை அவர்கள் தடுத்து நிறுத்தினார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை
ரியோ, விக்னேஷ் இருவரும் யு டியுப் வீடியோ நிகழ்ச்சியாளர்கள் என்பதை ஆரம்பத்திலேயே சரியாகக் காட்டவில்லை. வசனங்களிலேயே அவர்கள் பிரபலமானவர்கள் என சொல்லிவிடுகிறார்கள். ஒரே ஒரு முறை மட்டுமே ராதாரவியை மடக்கி மிரட்டி பிரான்க் செய்வது போல ஒரு நிகழ்ச்சியைக் காட்டுகிறார்கள். இருவரது கதாபாத்திரங்களிலும் ஒரு தெளிவு இல்லை. காட்சிக்குக் காட்சி வெவ்வேறு விதமாக நடிக்கிறார்கள். ஒரு காட்சியில் இயல்பாக நடித்தால் அடுத்த காட்சியில் ஓவர் ஆக்டிங் செய்கிறார்கள்.
சினிமாவுக்கேற்றபடி பேசாமல் நாடகத்தனமாகப் பேசுகிறார்கள். சின்னத்திரையில் கஷ்டப்பட்டு வளர்ந்த ரியோ, முதல் சினிமா வாய்ப்பு என்பதால் வேறு எதைப் பற்றியும் யோசித்திருக்க மாட்டார் போலிருக்கிறது. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ரியோ.
விக்னேஷ் காந்திற்கு எது நகைச்சுவை என்பதை யாராவது புரிய வைத்தால் நல்லது. நகைச் சுவை என்னவென்று தெரியாமல் நடிக்க வந்துவிட்டார் விக்னேஷ் காந்த் அவர் சிறுபிள்ளைத்தனமாகச் செய்வதையெல்லாம் ரசிக்கவே முடியவில்லை. யு டியுபில் மொக்கை காமெடிக்கெல்லாம் சிரிக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. ஆனால், சினிமாவில் அப்படியில்லை. இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஏதாவது ஒரு காட்சியிலாவது நம்மை சிரிக்க வைத்துவிடுவார் என்று எதிர்பார்த்தால் அதில் படம் பார்க்கும் மக்களாகிய நாம்தான் தோற்றுப் போகிறோம்.
ஷெரின் காஞ்வாலா என்பவர்தான் ஹீரோயின். பார்க்க சஞ்சிதா ஷெட்டி தங்கை போல இருக்கிறார். செய்தி சேனலில் நிருபர் கதாபாத்திரம். வரும் நான்கைந்து காட்சிகளில் இயக்குனர் சொன்னதை ஏதோ செய்துவிட்டுப் போயிருக்கிறார்.
நாசா முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் தலைவராக நாஞ்சில் சம்பத். நாஞ்சிலாரே, அரசியலில் உங்களுக்கென ஒரு தனி இமேஜ் இருக்கிறது. இப்படிப்பபட்ட சீப்பான கதாபாத்திரங்களில் நடித்து உங்களின் இமேஜை நீங்களே கெடுத்துக் கொள்கிறீர்கள் நாஞ்சில் சம்பத்
ராதாரவி மட்டும்தான் படத்தில் வழக்கம் போல கதாபாத்திரத்திற்கேற்றபடி நடித்துள்ள ஒரே நடிகர். மயில்சாமியை வீணடித்திருக்கிறார்கள். ரியோ, விக்னேஷுக்கு ஆதரவாக இருக்கும் சுட்டி அரவிந்த் கடைசியில் மனநலம் பாதிக்கப்படுகிறார் என்பதெல்லாம் பக்கா சினிமாத்தனம்.
ஷபிர் இசையில் ஒரு பாடல் கூட தேறவில்லை. ஒளிப்பதிவு உள்ளிட்ட மற்ற டெக்னிக்கல் விஷயங்களும் குறிப்பிடும்படி இல்லை.
படத்தில் உள்ள பல காட்சிகள் நம் பொறுமையை சோதிப்பதாகவே உள்ளன. கடைசி கிளைமாக்ஸ் மட்டும் கைதட்ட வைக்கிறது. அநியாயத்தை எதிர்க்க ஒருவன் கண்டிப்பாக வருவான் என்பது சிறப்பு. அவனைத் தொடர்ந்து பலரும் வருவார்கள் என்பது அதைவிடச் சிறப்பு. அந்த ஒன்றை ரசித்து கைதட்டுவதற்காக ஆரம்பத்திலிருந்து எப்படி பொறுமையாக உட்காருவார்கள் இயக்குனரே. இந்த கிளைமாக்சை யோசித்தவர் அதற்கு முன்பு எப்படிப்பட்ட காட்சிகளை யோசித்திருக்க வேண்டும்.
உங்கள் சினிமா கனவை நிறைவேற்ற சிவகார்த்திகேயன் என்ற ஒருவர் தேடி வந்திருக்கிறார். அவரது கனவை நிறைவேற்றியிருந்தால் உங்களைத் தொடர்ந்து இன்னும் பலர் வர வாய்ப்பாக அமைந்திருக்குமே.
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – இப்படிலாம் பண்ணலாமா ராஜா…!