நேர்கொண்ட பார்வை’ தமிழக விநியோக உரிமையை ஜெமினி பிலிம் சர்க்யூட் கைப்பற்றியுள்ளது

நேர்கொண்ட பார்வை’ தமிழக விநியோக உரிமையை ஜெமினி பிலிம் சர்க்யூட் கைப்பற்றியுள்ளது. இது தொடர்பான விளம்பரம் விரைவில் வெளியாகவுள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படம் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தணிக்கைப் பணிகள் முடிந்து, தற்போது க்யூபுக்கு அனுப்பப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 8-ம் தேதி நெருங்கும் வேளையில் யாருக்கு தமிழக விநியோக உரிமை என்பதில் குழப்பம் நீடித்தது.

முன்னணி நிறுவனங்கள் பலரும் போட்டியிட்ட போது, போனி கபூர் சொன்ன விலையை இந்தப் படம் வசூல் செய்யுமா என்று தயக்கம் காட்டினார்கள். ரெட் ஜெயண்ட் மூவிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இடையே ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது.

இது தொடர்பான அறிவிப்புடன் கூடிய விளம்பரம், நாளை (ஆகஸ்ட் 1) வெளியாகும் எனத் தெரிகிறது. மீண்டும் ஜெமினி பிலிம் சர்க்யூட் திரையுலகுக்கு வருவதால், அந்நிறுவனம் முன்பு தயாரித்து வெளியான படங்களின் நஷ்டத்தைச் சரி செய்ய வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் நினைத்து வருகிறார்கள். இந்தப் பிரச்சினையால் தான் அந்நிறுவனம் தயாரிப்பில் விஷால் நடித்த ‘மதகஜராஜா’ படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

ஆனால், ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனமோ ஆந்திராவில் உள்ள தங்களுடைய இடமொன்றை சமீபத்தில் விற்றுள்ளது. அதில் வந்துள்ள தொகையை வைத்து, தங்களது நிறுவனத்தைச் சுற்றியுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கக் களமிறங்கியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் ‘நேர்கொண்ட பார்வை’ உரிமையைக் கைப்பற்றி வெளியிட்டு விட்டு, அடுத்ததாக ‘மதகஜராஜா’ படத்தையும் வெளியிட ஆயத்தமாகி வருகிறது.