பக்கிரி – திரை விமர்சனம்

நடிப்பு – தனுஷ், பெரிநிஸ் பிஜோ, எரின் மொரியார்ட்டி
 
இயக்கம் – பென் ஸ்காட்
 
இசை – நிகோலஸ் எரெரா, அமித் திரிவேதி
 
தயாரிப்பு – பிரியோ பிலிம்ஸ், எம் கேபிட்டல் வென்சர்ஸ், லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ், டிஎப்1 ஸ்டுடியோஸ்
 
வெளியான தேதி – 21 ஜுன் 2019
 
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்
 
ரேட்டிங் – 3./5
 
 
 
“The Extraordinary Journey of the Fakir” என ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் எடுக்கப்பட்டு கடந்த வருடம் மே மாதம் வெளியான படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு பக்கிரி என்ற பெயரில் வெளியாகி உள்ளது.
 
கனடா நாட்டைச்சேர்ந்த இயக்குனர் கென் ஸ்காட் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அவர் இதற்கு முன் ஸ்டிக்கி பின்ஜர்ஸ், ஸ்டார்பக், டெலிவரி மேன், அன்பினிஷ்ட் பிசினஸ் ஆகிய ஆங்கிலப் படங்களை இயக்கி உள்ளார்.
 
கனடா நாட்டு இயக்குனராக இருந்தாலும் இந்தியாவின் மும்பையில் வசிக்கும் ஒரு ஏழைக்குடும்பம், அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனின் ஆசை என சென்டிமென்ட் டச்சுடன் இந்தப் படத்தைக் கொடுத்து ரசிக்க வைக்கிறார்.
 
மும்பையில் லாண்டரி துணிகளை வெளுக்கும் ஒரு பெண்மணி. பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்துக் கரம் பிடித்து மகனுடன் தனியாக வசிக்கிறார். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அந்த மகன் தன்னால் ஏழையாக இருக்க முடியாது என மேஜிக் செய்வதாகக் கூறி ஏமாற்றி குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கிறார். அந்த இளைஞன்தான் தனுஷ். தன் அப்பா பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்று அம்மாவிடம் இருந்து தெரிந்து கொள்கிறான். அம்மாவின் மரணத்திற்குப் பிறகு தன் அப்பாவைத் தேடி பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் செல்கிறார். அங்கிருந்து அவர் இங்கிலாந்து, ஸ்பெயின், லிபியா என சுற்ற வேண்டியிருக்கிறது. தன் பயணத்தில் அப்பாவைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
 
தமிழில் மட்டுமல்லாது ஹிந்தியிலும் ராஞ்சனா, ஷமிதாப் படங்களின் மூலம் இந்திய அளவில் பேசப்பட்டவர் தனுஷ். இந்தப் படம் மூலம் பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் பேசப்பட்டவராகி இருக்கிறார். தனுஷ் இதற்கு முன் நடித்த படங்களிலிருந்து இந்தப் படத்தில் அவருடைய நடிப்பு வேறு விதமாகத் தெரிகிறது. ராஜகுமரகுரு லட்சுமிபதி என்பதுதான் படத்தில் தனுஷின் பெயர். ஆனால், பக்கிரி என எதற்குத் தலைப்பு வைத்தார்கள் என்பதன் காரணம் தெரியவில்லை.
 
பாரிஸில் இறங்கியதும் ஒரு காதல், பின் அதில் பிரிவு, தெரியாமல் இங்கிலாந்திற்குள் நுழைந்து மாட்டிக் கொள்வது, ஸ்பெயினுக்கு அனுப்பப்படுவது, அங்கிருந்து லிபியாவிற்கு கடத்தப்படுவது என அவருடைய பயணத்தில் சிலவித அனுபவங்கள். லிபிய அகதிகளுக்காக தான் சேர்த்து வைத்த பணத்தைக் கொடுக்கும் போது நெகிழ வைக்கிறார். பிரெஞ்ச் ரசிகர்கள் இந்தப் படத்தையும் தனுஷையும் ரசித்தார்களோ இல்லையோ நாம் ரசிப்போம்.
 
தனுஷ் காதலியாக எரின் மொரியார்டி. இருவரும் பாரிஸில் முதல் நாள் சந்தித்துக் கொள்வதுடன் பிரிந்து விடுகிறார்கள். பின்னர் ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சந்தித்துக் கொண்டு மறுபடியும் பிரிகிறார்கள். இருவரும் இணைவார்களா மாட்டார்களா என்ற ஒரு ஏக்கத்தை நமக்குள் கொண்டு வந்துவிடுகிறார் இயக்குனர்.
 
தனுஷுக்கு உதவி செய்யும் நடிகையாக பெரிநிஸ் பிஜோ. தனுஷின் நல்ல மனதைப் புரிந்து கொண்டு அவருக்கு ஒரு கோடி ரூபாய் கிடைக்க உதவி செய்கிறார். தனுஷ் உதவியால் பிரிந்த தன் காதலருடன் மீண்டும் இணைந்து தனுஷுக்கு அவர் நன்றி சொல்லும் காட்சியில் நெகிழ வைக்கிறார்.
 
குட்டி தனுஷாக நடித்திருக்கும் ஹார்ட்டி சிங், தனுஷின் அம்மாவாக நடித்திருக்கும் அம்ருதா சந்த் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் இடம் பிடிக்கிறார்கள்.
 
ஆங்கிலத்திலிருந்து தமிழில் டப்பிங் ஆகி வெளியாகியுள்ள படம் என்ற உணர்வே வரவில்லை. வசனங்களிலும் ஆங்காங்கே நகைச்சுவை சேர்த்து ரசிக்க வைத்துள்ளார்கள்.
 
ஒரு குடும்பக் கதையாக ஆரம்பமாகி, காதல் கதையாக மாறி, கடைசியில் அகதிகளின் அவலத்தைச் சொல்லும் ஒரு படமாக முடிவடைகிறது. தனுஷ் நடித்த எத்தனையோ படங்களைப் பார்த்திருப்போம். ஆனால், இந்த பக்கிரியை வித்தியாசமான படம் என தாராளமாகச் சொல்லலாம்.
 
பக்கிரி – ஒரு முறை பார்க்கலாம்