பாக்ஸர் படத்துக்காக கடும் பயிற்சியில் ஈடுபட்ட நடிகர் அருண் விஜய்

இடைவிடாது உடற்பயிற்சியில் ஈடுபடுவதிலும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதிலும், கடுமையாக உழைப்பதில் தவிர்க்க முடியாத ஆர்வம் உடையவர் நடிகர் அருண் விஜய். “பாக்ஸர்” படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த உடனேயே, அவரது ரசிகர்கள் இந்த படத்திற்காக, கதாபாத்திரத்திற்காக அவர் செய்யும் தீவிர பயிற்சிகளின் வீடியோ ஏதாவது வெளியாகுமா என மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் இருந்தனர். குறிப்பாக பீட்டர் ஹெய்ன் போன்ற ஒரு வழிகாட்டியுடன், வியட்நாமில் அமைந்துள்ள உலகின் மிகவும் புகழ்பெற்ற தற்காப்புக் கலை பயிற்சி மையமான லின் பாங்கில் பயிற்சி பெறுவது ரசிகர்களிடையே உற்சாகத்தை தூண்டி இருக்கிறது.

படத்தின் இயக்குனர் விவேக் கூறும்போது, “அருண் விஜய் சார் ஒரு மாத கால நீண்ட பயிற்சியில் இருந்தார். நிஜ வாழ்க்கையில் தன் உடலை கட்டுகோப்பாக வைத்துக் கொள்வதில் அருண் விஜய் சார் ஒரு பரிபூரணவாதி என்று அனைவருக்கும் தெரியும். நம் “பாக்ஸர்” படத்திற்காக அவர் கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். பீட்டர் ஹெயின் மாஸ்டர் பரிந்துரைக்கு இணங்க, அவர் வியட்நாமில் உள்ள லின் ஃபாங்கில் பயிற்சி பெற்றார். அருண் விஜய் சார் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தொடர்ந்து அங்கு பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது. இருந்தாலும், அவர் மிகவும் கூலாக இருந்தார். இந்த படத்தை தங்கள் குழந்தையாக நினைத்து உழைக்கும் இந்த இருவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். தொழில்முறை ஈடுபாட்டை தாண்டி, அவர்கள் உணர்வுபூர்வமாக இந்த படத்தில் பணிபுரிவது நிச்சயம் படத்தை அடுத்த கட்டத்துக்கு மிகப்பெரிய அளவில் கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன். இந்த பயிற்சியில் முழு ஆதரவுடன் செயல்பட்ட உள்ளூர் பயிற்சியாளர் சந்தீப்பிற்கு நன்றி. அருண் விஜய் சார் கடினமான முயற்சிகள் எடுக்கும் இந்த வீடியோ, இதுவரை நாங்கள் செய்ததைப் பற்றிய ஒரு பார்வை மட்டுமே. இன்னும் கடுமையான பயிற்சிகளின் வீடியோக்கள் நிறைய உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த வீடியோவை ஆர்வமாக காத்திருந்த  ரசிகர்களுக்காக வழங்க விரும்பினோம். நான் ரசிகர்கள் என்று சொல்வது அவரது படங்களை மட்டும் பார்ப்பவர்களை அல்ல, அவரை போலவே உடற்பயிற்சி செய்து அவரை தொடர்ந்து பின்பற்றுபவர்களையும் தான்” என்றார்.

ஒரு மாத கால கடுமையான பயிற்சிகளை முடித்து கொண்ட அருண் விஜய் இரண்டு நாட்களுக்கு முன் சென்னை திரும்பினார். தற்போது அவரது குடும்பத்துடன் விடுமுறையில் இருக்கிறார். திட்டமிட்டபடி, இந்த ஜூன் மாதம் படப்பிடிப்பை தொடங்கி, குறிப்பிட்ட காலத்தில் படத்தை முடிக்க இருக்கிறார்கள்.

இந்தப் படம் ஒரு புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரரை பற்றியும், அவருக்குள் இருக்கும் தீய சக்தியை எதிர்த்து போராடும் ஒரு வீரனின் கதையை பற்றியது. ரித்திகா சிங் இந்த படத்தில் ஒரு விளையாட்டு பத்திரிகையாளரின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் முக்கிய நடிகர்கள் பலரும் நடிக்கிறார்கள். டி. இமான் இசையமைக்கிறார். சி.எஸ். பாலசந்தர் (கலை), நாடன் (படத்தொகுப்பு), பீட்டர் ஹெய்ன் (சண்டைப்பயிற்சி), ஹினா (ஸ்டைலிஸ்ட்), அருண் (ஆடை வடிவமைப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். விவேக் எழுதி இயக்கும் இந்த படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார்.

  1. VID-20190528-WA0017