பா.ரஞ்சித்துக்கு முன் ஜாமீன் வழங்க அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு

ராஜ ராஜ சோழன் குறித்து தரக்குறைவாக பேசிய வழக்கில் இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்க அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் கடந்த 5 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், சோழ மன்னர் ராஜ ராஜ சோழனை தரக்குறைவாக விமர்சித்தார். அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதைத்தொடர்ந்து சாதி மோதலை தூண்டும் வகையில் பேசியதாக தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள், கும்பகோணம் ஆகிய நகர காவல் நிலையங்களிலும் நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவல்நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

 

இதனால் கைது நடவடிக்கைக்கு அஞ்சிய இயக்குநர் ரஞ்சித் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில்  மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு  விசாரணைக்கு வந்தது.  மனுவை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், பேசுவதற்கு பல விஷயங்கள் இருக்கும் போது மக்கள் போற்றும் மன்னரை பற்றி பேசியது ஏன் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரஞ்சித் தனது பேச்சு எந்த சமூகத்திலும் பிளவை ஏற்படுத்தும் வகையில் இல்லை என்று தெரிவித்தார். பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களில் கூறியிருப்பதையே தானும் குறிப்பிட்டதாக கூறினார்.

 

 இதைத்தொடர்ந்து விசாரித்த நீதிபதி புகழ் பெற்ற மன்னர் ராஜராஜ சோழன் குறித்து பேசியதை தவிர்த்திருக்க வேண்டும், அரசியல் செய்ய எவ்வளவோ விஷயங்கள் இருக்கும் போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மன்னர் குறித்து பேசியது தவறு என்றார். ஜாதி மத பேதமின்றி ராஜராஜ சோழன் போற்றப்பட்டு வருகிறார். மன்னர் ராஜ ராஜ சோழன் காலம் தமிழகத்தின் கட்டடகலைக்கு சான்றாக அமைந்த காலம் என்றும் தெரிவித்த நீதிபதி, ராஜராஜ சோழன் குறித்து பேசியதை தவிர்த்திருக்கலாம் என்றார்

 

இயக்குநர் ரஞ்சித்துக்கு முன் ஜாமீன் வழங்க அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ரஞ்சித் மீது புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால் அவரிடம் விசாரிக்க வேண்டும் என்பதால் ரஞ்சித்துக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கு தொடர்பாக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இதைத்தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித்தை புதன்கிழமை வரை கைது செய்ய மாட்டோம் என அரசு தரப்பு உத்தரவாதத்தை பெற்ற நீதிமனறம் வரும் 19ஆம் தேதி வரை ரஞ்சித்தை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.