பிரதமர் மோடிக்கு எடப்பாடி கடிதம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்காக இரண்டு கடுமையான பிரிவுகள் மத்திய அரசு விதித்துள்ளது. சந்தை ஊக்கத் தொகையை அந்த சங்கங்கள் பெறக்கூடிய தகுதிகள் அதில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பிருந்த திட்டத்தின்படி, காலவரையறையோ அல்லது விற்றுமுதல் தொடர்பான தகுதியோ நிர்ணயிக்கப்படவில்லை என்பதால் சந்தை ஊக்கத்தொகையை பெறுவது எளிதாக இருந்தது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2 பிரிவுகளின்படி, கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே ஊக்கத் தொகை பெறமுடியும். மேலும், அந்த சங்கத்தின் விற்றுமுதல் ரூ.30 லட்சத்துக்கு அதிகமாக இருக்கக்கூடாது.

இந்த பிரிவின்படி, ரூ.30 லட்சத்துக்கு மேல் விற்றுமுதல் உள்ள சங்கங்கள் 2017-18-ம் ஆண்டில் இருந்து நிதி உதவி பெறுவதற்கான தகுதியை இழந்துவிடுகின்றன. புதிய விதிகளின்படி, 53 ஆயிரத்து 140 நெசவாளர்களைக் கொண்ட 285 சங்கங்கள் மட்டுமே நிதி உதவியை பெற தகுதி பெற்றவை ஆகின்றன. ஆனால் கடந்த விதிகளின்படி 2 லடசத்து 69 ஆயிரத்து 30 நெசவாளர்களைக் கொண்ட 868 சங்கங்கள் நிதியுதவி பெற்று வந்தன.

விற்பனை விற்றுமுதலை ரூ.30 லட்சத்துக்கு மேல் உயர்த்தி இருப்பதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் சந்திக்க வேண்டியது வரும். கைத்தறி நெசவு உற்பத்தி பொருட்கள் விற்பனை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு, அந்த சங்கங்கள் தொடர்ந்து இயங்குவதற்கு தடை ஏற்படும். சங்கங்களில் பணப்புழக் கம் குறைந்து, நெசவாளர்களுக்கு தொடர்ந்து பணி கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும்.நெசவுத் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டு அவர்கள் வாழ்வாதாரத்துக்காக வேறிடம் செல்லும் நிலை ஏற்பட்டுவிடும். கைத்தறி நெசவு உற்பத்திப் பொருட்களின் கையிருப்பு தேக்கமடையும். இதனால் மூலதனத்தில் இழப்பு நேரிடும்.
கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள கைத்தறி நெசவு கூட்டுறவு சங்கங்கள், விற்பனையை மேம்படுத்துவதற்கு சந்தை ஊக்கத் தொகையைத்தான் பெருமளவில் நம்பி இருக்கின்றன.ஏற்னவே கைத்தறி பொருட் கள் மீது ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் கைத்தறி நெசவு பொருட்கள் விற்பனையில் பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கையிருப்பில் உள்ள பொருட்களை விற்பதற்கு அந்த சங்கங்களுக்கு ஆதரவு அவசியமாகிறது.
ரூ.30 லட்சத்துக்கு மேல் விற்றுமுதல் உள்ள சங்கங்களில்தான் அதிக நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். எனவே விசைத்தறி தயாரிப்பு பொருட்களுடன் விற்பனையில் போட்டிபோடும் நிலையில், கைத்தறி சங்கங்களுக்கு பொருட்களை சந்தைப்படுத்துவதில் ஆதரவு அளிப்பது அவசியமாகும். இந்த சங்கங்கள்தான் லட்சக்கணக்கான நெசவாளர்களுக்கு வேலை அளிக்கின்றன. இதுதான் தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். எனவே தற்போது அறிமுகம் செய்துள்ள 2 பிரிவுகளையும் நீக்குவதற்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்துக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறி உள்ளார்.