பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் கே ப்ரொடக்ஷன்சுடன் இணையும் ஜிவி பிரகாஷ் குமார்
தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரித்து வெளியிடுவதில் முனைப்போடு செயல்பட்டு வரும் நிறுவனம் கே ப்ரொடக்ஷன்ஸ். இந்நிறுவனம் சார்பில் எஸ். என். ராஜராஜன், ஜிவி. பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார்.
இந்த புதிய படத்தின் மூலம் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குனராக அறிமுகமாகிறார். ஜிவி. பிரகாஷுக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார். இவர் சீமதுரை , 96, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் வாகை சந்திரசேகர் மற்றும் அறிமுக நடிகர் குணா நடிக்கிறார்கள்.
ஜிவி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இவர் அண்ணனுக்கு ஜே, வெள்ளை யானை படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர். படத்தொகுப்பை எஸ். இளையராஜா கவனிக்கிறார்.
இப்படத்தில் ஜிவி பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார். ஒரு மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்ஷன் கலந்து திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். காதல், எமோஷனல், ஆக்ஷன் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக தயாராக இருக்கிறது. இந்த படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா இன்று (12.9.2019) ஏ.வி.எம் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர்கள் வெற்றிமாறன், சமுத்திரகனி, சுப்ரமணிய சிவா, சரவணன், இளன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்