பிரிட்டன் குடியுரிமை விவகாரத்தால் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு

காங்கிரஸ் தலைவராக தற்போது பதவி வகிக்கும் ராகுல் காந்தி கடந்த 2004ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது ✈பிரிட்டன் நாட்டில் உள்ள நிறுவனத்தில் சில முதலீடுகளை செய்திருப்பதாக தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார். மேலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்ற ராகுல் காந்தியின் பட்டமளிப்பு சான்றிதழில் அவரது பெயர் ’ராகுல் வின்சி’ என்ற இத்தாலிய துணைப்பெயருடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.இதனையடுத்து, தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் அவரை எதிர்த்து நிற்கும் சுயேட்சை வேட்பாளரான துருவ் லால் என்பவர், “பிரிட்டன் குடிமகனான ராகுல் காந்தி நம் நாட்டு தேர்தலில் எப்படி போட்டியிடலாம்” என்றும் அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி அந்த தொகுதி தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க ராகுல் காந்திக்கு அவகாசம் அளிக்கும் வகையில் அவரது வேட்புமனு மீதான பரிசீலனை மற்றும் விசாரணை வரும் 22ம் தேதி நடைபெறும் என அமேதி தொகுதி தேர்தல் அதிகாரி ராம் மனோகர் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.