புகைப்பிடிக்கும் ‘ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்’ – வருத்தம் தெரிவித்த நடிகர் சந்தானம்.

தனது புகைப்பிடிக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது தொடர்பாக, நடிகர் சந்தானம் வருத்தம் தெரிவித்தார்

பிரபல நகைச்சுவை நடிகர் சந்தானம். இவர் முன்னணி கதாநாயகர்கள் படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு கதாநாயகனாக மாறினார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், சக்க போடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தற்போது ‘டகால்டி’ என்ற படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் சந்தானம் புகைப்பிடிப்பது போன்ற முதல் தோற்ற போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். ஏற்கனவே நடிகர்கள் புகைபிடிக்கும் போஸ்டர்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. போராட்டங்களும் நடந்துள்ளன.

அதுபோல் சந்தானம் புகைப்பிடிக்கும் தோற்றமும் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமூக ஆர்வலர்கள் பலர் வலைத்தளத்தில் சந்தானத்தை விமர்சித்து கருத்து பதிவிட்டனர். புகைப்பிடிப்பதை ஊக்கப்படுத்த வேண்டாம் என்றும் அவரை கண்டித்தனர். இதைத் தொடர்ந்து சந்தானம் புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்ததற்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-

“நான் புகைப்பிடிப்பது போன்று உருவாக்கப்பட்டு இருந்த படத்தின் முதல் தோற்ற போஸ்டர் கவனக்குறைவாக வெளியிடப்பட்டு விட்டது. உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இந்த போஸ்டர் இருக்கிறது என்பதை நான் உணர்கிறேன். இனிவரும் எனது அடுத்த படங்களில் இதுபோன்ற புகைப் பிடிக்கும் காட்சிகள் இல்லாமல் முதல் தோற்ற படங்கள் வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.” இவ்வாறு சந்தானம் கூறினார்.