புது கதை சொன்னார் இயக்குனர் வினோத்; பிடித்து போனது அஜித்குமார்க்கு!

போனிக் கபூர் தயாரிப்பில், நடிகர் அஜித் நடிக்கும், பிங்க் பட தழுவலான நேர்கொண்ட பார்வை படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில், நடிகர் அஜித்துடன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், வித்யா பாலன், ஷரத்தா ஸ்ரீநாத், அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படத்தில், நடிகர் அஜித்துக்காக வழக்கறிஞர் கேரக்டர் உருவாக்கப்பட்டு, அதை பிரமாதமாக படமாக்கி இருப்பதாக படம் குறித்து வினோத் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், நடிகர் அஜித்தின் அடுத்த படத்தையும் ஹெச். வினோத் இயக்கப் போவதாக ஒரு தகவல் பரவியது. போனிக் கபூரே அடுத்தப் படத்தையும் தயாரிக்க இருக்கும் நிலையில், ஹெச்.வினோத் எழுதிய ஒரு கதையை அஜித்திடம் சொல்லியிருக்கிறார். அவருக்கு அந்தக் கதை பிடிக்கவில்லை.
இதையடுத்து, ஹெச்.வினோத், அஜித்தை வைத்து தொடர்ச்சியாக படம் இயக்கும் வாய்ப்பு பறிபோய் விட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், போனிக் கபூர், இயக்குநர் ஹெச்.வினோத்தை அழைத்து அஜித்துக்காக, புது கதை ஒன்றை தயார் செய்து வரச் சொன்னார். அதன்படியே, வினோத்தும் புது கதை ஒன்றை ரெடி செய்து, போனிக் கபூரிடம் கூற, அது அவருக்கு பிடித்து போனது. கதையை, அஜித்திடம் சொல்லுமாறு வினோத்தை, போனிக் கபூர் கேட்டுக் கொண்டார். 

அதன்படி, அஜித்திடம், வினோத் புது கதை ஒன்றைச் சொல்ல, கதை பிடித்து விட்டதாக அஜித் கூறி, புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இதனால், அஜித்தின் 60வது படத்தையும், இயக்குநர் ஹெச் வினோத்தே இயக்குகிறார்.