மறைந்த 5 முதலமைச்சர்களின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்திய LKG படக்குழு!

நம் சமகால அரசியல் அல்லது சமூக பிரச்சினைகள் நையாண்டி செய்யும் திரைப்படங்களுக்குள் இருக்கும் ஒரு பொதுவான விஷயம் அவை ஒரு சிறிய அளவில் தான் அதை பேசும். உண்மையிலேயே, ‘அரசியல் நையாண்டி’ படங்களுக்கு இங்கே பெரிய பற்றாக்குறை தான் இருக்கிறது. ஏனெனில் அத்தகைய கதைகளை எழுதி, அதை சினிமாவாக உருவாக்குவதற்கு மிகச்சிறப்பான கதை ஆற்றல் தேவைப்படுகிறது. ஆனால் ஆர்.ஜே.பாலாஜியின் LKG படம் அதன் ப்ரோமொ விளம்பரங்கள் மற்றும் பாடல்கள் மூலம் மிகப்பெரிய வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் வெளியீட்டிற்கு முன்பே பெற்றிருக்கிறது. மேலும், இந்த வகையான ஒரு படத்திற்கு அதிகாலை காட்சிகள் திரையிடப்படுவது என்பது படத்தின் மீதான அபரிமிதமான எதிர்பார்ப்பை காட்டுகிறது. இந்நிலையில் இந்த படக்குழு தமிழ்நாட்டின் மறைந்த, மக்கள் மனதில் நீங்கா புகழுடன் வாழும் மரியாதைக்குரிய 5 முதலமைச்சர்களின் நினைவிடங்களுக்கு சென்று வந்திருக்கிறது.

இந்த அனுபவத்தை பற்றி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கூறும்போது, “அரை நூற்றாண்டுக்கும் மேலாக, ஒரு ஊக்கமளிக்கும் அரசியல் பயணத்தை நிகழ்த்திய மறைந்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இதை நாங்கள் செய்திருக்கிறோம். எப்படி அம்மன் போன்ற கடவுள்களை பற்றி படம் எடுக்கும்போது, கே.ஆர்.விஜயா போன்றோர் அதற்காக விரதம் இருந்து ஆசீர்வாதம் பெற்றார்களோ, அது மாதிரி நாங்கள் நம் தலைவர்கள் காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி மற்றும் செல்வி ஜெயலலிதா ஆகியோரிடம் ஆசி பெற அவர்கள் நினைவிடங்களுக்கு சென்று வந்தோம். எங்கள் படமான எல்.கே.ஜி மூலம் இந்த தலைவர்கள் அவர்கள் காலத்தில் செய்த அற்புதமான விஷயங்களை வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறோம்” என்றார்.

தயாரிப்பாளர் Dr. ஐசரி கே கணேஷ், ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் மற்றும் பலர் இந்த தலைவர்களின் நினைவிடங்களுக்கு ஒரு குழுவாக சென்று வந்தனர். பிப்ரவரி 22ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் கதையை ஆர்.ஜே.பாலாஜி மற்றும் நண்பர்கள் இணைந்து எழுத, கே.ஆர்.பிரபு இயக்கியிருக்கிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் Dr.ஐசரி கே கணேஷ் தயாரித்திருக்கிறார்.