மாநாடு படத்தில் அவர் நடிக்கவில்லை – வெங்கட் பிரபு விளக்கம்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு – கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகும் மாநாடு படத்தில் அரசியல்வாதி கதபாத்திரத்தில் இயக்குநரும், நடிகருமான கங்கை அமரன் நடிப்பதாக வெளியான தகவலை வெங்கட் பிரபு மறுத்துள்ளார்.
சென்னை 600028′ இரண்டாம் பாகத்திற்கு பிறகு வெங்கட் பிரபு `பார்ட்டி’ என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில், வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும், அந்த படத்திற்கு `மாநாடு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், முக்கிய கதபாத்திரத்தில் அர்ஜூனும் நடிக்கிறார்கள்.
அரசியல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகும் இதில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்க வெங்கட் பிரபுவின் அப்பாவும், இயக்குநரும், நடிகருமான கங்கை அமரன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அந்த தகவலில் உண்மையில்லை என்று வெங்கட் பிரபு மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், இந்த படத்தில் நடிப்பதற்காக சிம்பு தனது உடல் எடையை குறைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.