மாற்றத்தை விரும்பும் மக்கள்: இயக்குனர்  கருத்து

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா பெரும்பான்மை தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது.

சீமானின் நாம் தமிழர் கட்சியும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் தோல்வியை சந்தித்தாலும் அதிக வாக்குகளை பெற்று உள்ளன. 

இதனால் இரண்டு கட்சிகளும் பெரிய சக்திகளாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது என்று டைரக்டர் சேரன் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:–

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியும், மக்கள் நீதி மய்யமும் அதிக வாக்குகள் வாங்கி உள்ளன. இரு பெரும் கட்சிகளை எதிர்த்து தைரியமாக களத்தில் இறங்கி தனியே நின்று மாற்றத்துக்கு வித்திட்டவர்களை வாழ்த்துவோம். நாடாளுமன்ற தேர்தல் இறுதி நிலவரப்படி நாம் தமிழர் கட்சி 16.67 லட்சம் வாக்கு வாங்கியதாக தகவல் வந்துள்ளது. 

அப்படியென்றால் மக்கள் நீதி மய்யத்தை விட சற்று அதிகமாகவே உள்ளது. அல்லது சமமாக உள்ளது. யார் பெரியவர்கள் என்பதற்காக அல்ல என் பதிவு. மக்களில் பத்து சதவீதத்துக்கு மேல் மாற்றத்தை விரும்புகிறார்கள் எனக்கூறவே’’

இவ்வாறு இயக்குனர் சேரன் கூறியுள்ளார்.