மிஸ்டர் லோக்கல்’ படத்தை பற்றி கண்டிப்பாக பேச வேண்டாம் – சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் எஸ்.கே. புரெடக்ஷ்சன் தயாரித்துள்ள ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஷபீர் இசையமைப்பில், ரியோ ராஜ், விக்னேஷ் காந்த், ராதாரவி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
இந்த நிகழ்வில் பேசும் போது, ‘மிஸ்டர் லோக்கல் தயாரிப்பாளருக்கு இந்த படம் வெற்றிப் படம்தான் என்றும், அந்தப் படம் பற்றிப் பேச வேண்டாம்,’ என்றும் சிவகார்த்திகேயன் கண் கலங்க பேசினார்.
அந்தப் படத்தில் அவரை சிலபல பஞ்சாயத்துக்களுக்குப் பிறகு தான் நடிக்க வைத்தார்கள். சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த படங்களிலேயே மிக மோசமான தோல்வியைத் தழுவிய படமாக அந்தப் படம் அமைந்தது. படம் சரியாகப் போகவில்லை என்பதை சிவகார்த்திகேயனும் இன்றைய பேச்சில் ஒத்துக் கொண்டார். இருப்பினும் தொடர்ந்து ரசிகர்கள் கண்டிப்பாக ரசிக்கும்படியான நல்ல படங்களைத்தான் தருவேன் என்றார். அவர் பேசியதிலிருந்து,
“ஜெயிக்கும் போது ஒரு அணியா நிக்கிற மாதிரி தெரியும். தோக்கும் போதுதான் தனியா நிக்கிறோம்கறது புரியும். ஆனா, தோக்கறதோ, தனியா நிக்கிறதோ பிரச்சினையில்லை, நிக்கிறோம்கறது தான் பிரச்சினை, நான் நிக்கிறேன்.
படம் கண்டிப்பா சரியா போகலை, அடுத்தடுத்த படங்கள் இப்படி இருக்காது. உங்க வாழ்க்கைல இருக்கிற கதைகள், உங்களுக்குப் பிடிச்ச கதைகள், நம்ம எல்லோரும் ரசிக்கிற கதைகள், அடுத்தடுத்து படங்கள் வரிசை படுத்தி வைத்திருக்கிறேன்.
இது எல்லாமே ஒரு விளையாட்டு தான். ஒரு விளையாட்டில் வந்து அவுட் ஆயிட்டோம், தோத்துட்டோம்னா, அந்த விளையாட்டு தான் முடியும், வாழ்க்கை முடியாது. அப்படித்தான் நான் நம்புறேன்.
நீங்க எல்லாரும் ஆசைப்பட்டு ரசித்து இவ்வளவு பெரிய ஒரு மேடையைக் கொடுத்திருக்கீங்க. இங்க நான் நிக்கிறது, லட்சக்கணக்கான பேரோட வேர்வையில வந்த டிக்கெட்டு காசுல, அவங்க உழைப்பு இருக்கு. அதோட என் வேலை நான் பார்க்கிற வேலையிலும் எனது உழைப்பும் இருக்கு.
நான் கடந்து வந்த வலி, வேதனை, துரோகம், நட்பு, பாசம், உழைப்பு அதைத்தாண்டி இருக்கிற வெறி, அது என்னை விடாதுன்னு நினைக்கிறேன். நான் ஓடிக்கிட்டே இருக்கேன். இன்னும் சூப்பரான படங்கள் பண்ணுவோம். உங்களை கண்டிப்பாக சந்தோஷப்படுத்தணும்.
அடுத்து நான் பிளான் பண்ணியிருக்கிற படங்கள் என் தயாரிப்பாளருக்கு லாபகரமான படங்களாக இருக்கும். கடைசி படம் கூட என் தயாரிப்பளாருக்கு லாபகரமான படம்தான், ஆனா, அதைப் பத்தி பேச வேணாம்.
அடுத்த படம் எல்லாருக்கும் லாபகரமான படமா இருக்கும். அதை மாதிரி முதல் நாள் முதல் ஷோ என் படத்தைப் பார்க்க வரவங்களுக்கு சந்தோஷமா சிரிச்சிட்டு போனா போதும். அவங்க படம் நல்லா இருக்குன்னு சொல்லணும்னு கூட வேணாம். வெளிய போகும் போது நான் ஜெயிக்கணும்னு ஆசைப்படறவங்க, சிரிச்சிட்டு சந்தோஷமா போனாதான் எனக்கும் ரொம்ப சந்தோஷம்.
ஒரு தயாரிப்பாளரா என்னோட விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரங்களுக்கு என்னோட குழுவுக்கு வெற்றிகரமான படமாக இருக்கணும். அதை மட்டும் வச்சிட்டுதான் உழைச்சிட்டே இருக்கேன்.
கடைசியா எல்லாருக்கும் நான் சொல்ல விரும்பறது, ஒண்ணே ஒண்ணுதான். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா,” என லேசாகக் கண் கலங்கி பேசி முடித்தார்.
சிவகார்த்திகேயன் தன் பேச்சில் முடித்த ‘ராஜா’ யார் என்பது கோலிவுட்டில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது