மீண்டும் இந்தி காஞ்சனாவை இயக்கும் ராகவா லாரன்ஸ்?

சில பிரச்சனைகளால் இந்தி காஞ்சனா படத்தில் இருந்து வெளியேறிய ராகவா லாரன்ஸ், தற்போது மீண்டும் இயக்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா படம் சூப்பர் ஹிட்டானது. மேலும் அதன் தொடர்ச்சியாக காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 படங்கள் வெளியாகி 100 கோடிக்கும் மேல் வசூலித்து பிரம்மாண்ட சாதனையை படைத்துள்ளது.

இந்நிலையில், அக்‌ஷய் குமாரை வைத்து பாலிவுட்டில் காஞ்சனா முதல் பாகத்தை இந்தியில் ரீமேக் செய்ய ராகவா லாரன்ஸை அழைத்தார்கள்.

அவரும், ‘லக்‌ஷ்மி பாம்’ எனும் பெயரில் அந்த படத்தை இயக்க முடிவுசெய்து, படவேலைகளை துவக்கினார். ஆனால், தயாரிப்பு தரப்பு சரியான மரியாதையை தனக்கு கொடுக்கவில்லை என்றும், தன்னை கேட்காமல் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர் என்றும் கூறி அப்படத்தில் இருந்து வெளியேறினார் லாரன்ஸ்.

இந்நிலையில், படக்குழுவினர் தன்னுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு வருவதாகவும், தனக்கு இனிமேல் உரிய மரியாதை கிடைக்கும் பட்சத்தில், என்னுடைய ரசிகர்கள் மற்றும் அக்‌ஷய் குமாரின் ரசிகர்களின் கோரிக்கைக்கு இணங்கி மீண்டும் படத்தை இயக்கலாமா வேண்டாமா என முடிவு செய்வது, அவர்கள் பேசுவதை பொறுத்துத்தான் என்று ராகவா லாரன்ஸ் கூறியிருக்கிறார்.

பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்து மீண்டும் ராகவா லாரன்ஸ் லக்‌ஷ்மி பாம் படத்தை இயக்குவார் என்றே பாலிவுட் ஊடகங்கள் கூறிவருகின்றனர்.