மே 24 தேதி போட்டியில் வரும் 6 படங்கள்

கோடை விடுமுறையின் கடைசி வாரத்தில் இருக்கிறோம். நாளை(மே 23) வெளியாக இருக்கும் படங்களுக்குத்தான் கோடை விடுமுறையின் ஒரு வார காலம் இருக்கிறது. அதனால், நாளைய வெளியீடுகளுக்கு ஓரளவிற்கு வசூலைப் பெறும் வாய்ப்புள்ளது. படங்கள் சரியாக இருந்தால்தான் அந்த வசூல் கிடைக்கும். ஆனால், நாளை வெளியாக உள்ள 6 படங்களுமே சிறிய பட்ஜெட் படங்களாக எந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாத படங்களாக இருக்கின்றன.

இவற்றைப் பற்றிய விவரங்கள், யார் நடிக்கிறார்கள் என்பது கூட ரெகுலாக படம் பார்க்கும் ரசிகர்களிடம் சென்று சேர்ந்திருக்குமா என்பது சந்தேகம்தான். தெரிந்த நடிகர்கள் நடித்துள்ள படங்களாக அஞ்சலி நடித்துள்ள ‘லிசா’ 3டி படமும், ஜெய், லட்சுமி ராய், கேத்தரின் தெரேசா வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள ‘நீயா 2’ படமும், ஓவியா நடித்துள்ள ‘சீனி’ படமும் தான் இருக்கின்றன. நாளை வெளியாக உள்ள மற்ற படங்களான ‘பேரழகி ஐஎஸ்ஓ, ஔடதம், வண்ணக்கிளி பாரதி’ ஆகிய படங்கள் எந்த நட்சத்திர அந்தஸ்தும் இல்லாத படங்களாக வெளிவருகின்றன.

விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர்கள் நாளையும், இந்த வார இறுதி நாட்களிலும் அவர்களது சொந்த ஊருக்குக் கிளம்புவார்கள். அதனால், படங்களைப் பார்க்க தியேட்டர்களுக்கு வரும் மக்கள் கூட்டங்களும் குறைவாக இருக்கும். தேர்தல் முடிவுகளின் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு மக்களுக்கு சினிமா ஆர்வத்தை விட அரசியல் ஆர்வம் அதிகமாக இருக்கும். இதெல்லாமும் நாளை வெளியாக உள்ள படங்களின் வசூலை பாதிக்கலாம்.