வானம் கொட்டட்டும் – திரை விமர்சனம். ரேட்டிங் – 3./5
நடிப்பு – விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ், சரத்குமார், ராதிகா, மதுசூதனா ராவ், பாலாஜிசக்திவேல், நந்தா, சாந்தனு பாக்யராஜ் மற்றும் பலர்
தயாரிப்பு – மெட்ராஸ் டாக்கீஸ்
இயக்கம் – தனா
இசை – சித் ஸ்ரீராம்
வெளியான தேதி – 7 பிப்ரவரி 2020
மக்கள் தொடர்பு – ஜான்சன்
ரேட்டிங் – 3./5
தமிழ் திரைப்பட உலகில் ஒரு முழுமையான குடும்பக் கதையைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது.
அந்தக் குறையை இந்த வானம் கொட்டட்டும் போக்கியிருக்கிறது. இந்த திரைப்படத்தில் நிறைய நடிகர்கள், நடிகைகள். இருந்தாலும் அனைவருக்குமே குறிப்பிடத்தக்க அளவில் முக்கியத்துவம் கொடுத்து இதமான காதல், சென்டிமென்ட், வில்லத்தனம் என சுவாரசியமாய் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தனா.
ஒரு கிராமத்தில் இருந்து ஆரம்பமாகும் கதை, சென்னைக்கு நகர்ந்தாலும் கிராமிய மணம், அதன் பாசம் ஆகியவை மாறாத அளவில் திரைப்படத்தின் திரைக்கதையில் அதை உயிரோட்டமாய் இணைத்திருக்கிறார். இயக்குனர் தனா.
தனது அண்ணனைக் கொலை செய்ய முயற்சித்தவர்களைக் கொலை செய்துவிட்டு சிறைக்குச் செல்கிறார் சரத்குமார். அவருடைய மனைவி ராதிகா, தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வருகிறார்.
ஒரு பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை செய்து குழந்தைகளை வளர்த்து ஆளாக்குகிறார். தன் மகன் கதாநாயகன் விக்ரம் பிரபு கால் டாக்சி ஓட்டி பின் கோயம்பேடு மார்க்கெட்டில் வாழைப்பழம் வியாபாரம் செய்ய ஆரம்பிக்கிறார்.
ராதிகாவின் மகள் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் வக்கீலுக்குப் படித்து வருகிறார். 16 வருடங்கள் கழித்து சிறையிலிருந்து விடுதலையாகி தனது குடும்பத்தினரிடம் சேருகிறார் சரத்குமார்.
ஆனால், மகனும், மகளும் அவரிடம் சரியாகக் கூடப் பேசாமல் தவிர்க்கிறார்கள். இதனிடையே, சிறையிலிருந்து வந்த சரத்குமாரைப் பழி வாங்க, அவர் கொலை செய்தவரின் மகனான நந்தா துடித்துக் கொண்டிருக்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக் கதை.
கதாநாயகன் விக்ரம் பிரபு இதுவரை நடித்த படங்களை விட இந்தப் படத்தில் கூடுதலான கவனத்துடன் நடித்திருக்கிறார். கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அதற்கேற்றபடியான இயல்பான நடிப்பு வெளிப்படுகிறது.
கதாநாயகன் விக்ரம் பிரபு தங்கையாக கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தன்னைப் பொருத்திக் கொள்ளும் திறமையை நன்றாகவே வளர்த்துக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அம்மா, அண்ணனுடன் பாசமாகவும், நண்பன் சாந்தனுவுடன் காதலை மறைத்துக் கொண்டும், மற்றவர்களைக் காட்டிலும் நடிப்பில் முதலிடத்தில் நிற்கிறார்.
சரத்குமாரை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. தான் பெற்ற மகனும், மகளும் தன்னை வெறுப்பாகப் பார்த்து அவமானப்படுத்திய பின் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
பின்னர் தனது மனைவி ராதிகாவிடம், அவர்களே தன்னைத் தேடி வந்து அழைக்கும் வரை வீட்டிற்கு வர மாட்டேன் என சொல்லும் போது மனதை நெகிழ வைக்கிறார். இயக்குனர் தனா.
ஒரு அம்மா கதாபாத்திரத்தை தமிழ் சினிமாவில் ராதிகா சரத்குமார் போன்றவர்களிடம் கொடுத்தால் அதன்பின் இயக்குனர் எதையுமே சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை.
அவர்களாகவே அந்தக் கதாபாத்திரத்தைத சிறப்பாகச் செய்துவிடுவார்கள். நடுத்தரக் குடும்பத்து அம்மாவை நம் கண் முன் அப்படியே கொண்டு வந்து நிறுத்துகிறார் ராதிகா.
சிறு வயதிலிருந்தே கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்வுடன் நட்பாகப் பழகும் கதாபாத்திரத்தில் சாந்தனு. அதிக முக்கியத்துவம் இல்லை என்றாலும் ஒரு அன்பான நண்பனாக வலம் வருகிறார். கடைசியில் அவருக்கும் ஒரு முக்கியத்துவத்தை சேர்த்துவிட்டார்கள்.
மடோனா செபாஸ்டியனுக்கு அதிக வேலையில்லை, இருந்தாலும் அவர் வரும் காட்சிகளில் அவருக்கான இடத்தை காட்சிகள் மூலமும், வசனம் மூலமும் உருவாக்கித் தந்திருக்கிறார் இயக்குனர் தனா.
இரு வேடங்களில் நந்தா. ஒருவர் இயல்பானவர், மற்றொருவர் அப்பாவைக் கொன்றவர்களைப் பழி வாங்கத் துடிப்பவர். சில படங்களில் வில்லனாகவே பார்த்த மதுசூதன ராவை இந்தப் படத்தில் நல்லவராகக் காட்டியிருப்பது மிகவும் ஆச்சரியம்தான்.
தமிழ் சினிமாவிற்கு அந்தக்கால எஸ்.வி.ரங்கா ராவ் போன்ற ஒரு நடிகர் வளர்ந்து வருகிறார், அவர்தான் இயக்குனர் பாலாஜி சக்திவேல். சரத்குமார் அண்ணனாக அப்படி ஒரு பண்பட்ட நடிப்பு மிகவும் அருமையாக நடித்துள்ளார்.
சித்ஸ்ரீராம் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஆனால், பின்னணி இசை ஒலிக்க வேண்டிய இடங்களில் கூட பாடல்களை நிரப்பியிருக்கிறார்கள். குறிப்பாக கிளைமாக்சில் எதற்கு அந்த சோகமான பாடல் எனத் தெரியவில்லை.
சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகர்வதைப் போல ஒரு உணர்வு இருக்கிறது, அது மட்டும்தான் சிறிது குறையாக உள்ளது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால் ஒரு நிறைவான குடும்பக் கதையை ரசித்துவிட்டு வரலாம்.
வானம் கொட்டட்டும் – இந்த திரைப்படத்தில் குடும்பத்துடன் கண்டிப்பாக நனையலாம்!