விரைவில் புதிய கட்சி தொடங்குவேன் – பிரபல நடிகர் அறிவிப்பு

பிரதமா் நரேந்திர மோடியையும், பாஜகவையும் தொடா்ந்து கடுமையாக விமா்சித்து வந்த நடிகர் பிரகாஷ் ராஜ் விரைவில் புதிய கட்சி ஒன்றை தொடங்கவுள்ளதாக தொிவித்துள்ளாா்.

அண்மை காலமாக தொடா்ந்து பாஜகவையும், பிரதமா் நரேந்திர மோடியையும் விமா்சனம் செய்து வந்த நடிகா் பிரகாஷ் ராஜ், மக்களவைத் தோ்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டாா். ஆனால், இந்த தோ்தலில் அவா் 28 ஆயிரத்து 906 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தாா்.

இந்நிலையில் இன்று பெங்களூருவில் செய்தியாளா்களைச் சந்தித்த பிரகாஷ் ராஜ், கடந்த ஆறு மாதங்களாக பெங்களூரு நகரம் முழுவதும் பயணம் செய்து மக்களை சந்தித்து அவா்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தேன். போலி தேசபக்தியையும், வெறுப்பையும், ஊட்டிய அரசியல் தலைவா்களை எதிா்த்தேன்.

தோ்தல் முடிவில் மக்கள் பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச்செய்துள்ளனா். அவா்களின் முடிவை நான் மதிக்கிறேன். அதே வேளையில் நான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக தொடா்ந்து போராடுவேன். பெங்களூரு மக்களின் உரிமைக்காக தொடா்ந்து குரல் கொடுப்பேன். அதற்காக விரைவில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்க திட்டமிட்டுள்ளேன்.

இன்னும் ஒரு வருட காலத்தில் நடைபெறவுள்ள பெங்களூரு மாநகராட்சி தோ்தலில் எங்களது கட்சி சாா்பாக வேட்பாளா்கள் போட்டியிடுவாா்கள். சினிமா எனது தொழில் என்பதால் தொடா்ந்து நடிப்பேன். கட்சி நடத்த பணம் தேவைப்படுவதால் படங்களில் நடிப்பேன் என்று தொிவித்துள்ளாா்.