Thursday, May 28
Shadow

வி1 மர்டர் கேஸ் திரை விமர்சனம்

நடிப்பு – ராம் அருண் காஸ்ட்ரோ, விஷ்ணுப்ரியா பிள்ளை மற்றும் பலர்

தயாரிப்பு – பாராடிக்ம் பிக்சர்ஸ், கலர்புல் பீட்டா மூவ்மென்ட்

இயக்கம் – பாவல் நவகீதன்

இசை – ரோனி ரபேல்

மக்கள் தொடர்பு – சதீஷ்
AIM TEAM

வெளியான தேதி – 27 டிசம்பர் 2019

ரேட்டிங் – 2.5/5

த்ரில்லர் வகைப் திரைப்படங்களைக் கொடுப்பதற்கு தனி கவனம் வேண்டும்.கதை திரைக்கதையில் எந்த நிலையிலும் அதன் சஸ்பென்ஸ் அப்படியே இருந்தால்தான் படம் பார்க்கும் ரசிகர்கள் வெகுவாக ரசிக்க முடியும். கிளைமாக்சில் மட்டும்தான் உண்மையை அவிழ்க்க வேண்டும். அதுதான் ஒரு சிறந்த த்ரில்லர் திரைப்படத்துக்குரிய இலக்கணம்.

அறிமுக இயக்குனர் பாவல் நவகீதன், அப்படி ஒரு சஸ்பென்ஸ் ஆன த்ரில்லர் படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

ஒரு இரவு நேரத்தில் தனியாக நடந்து செல்லும் ஒரு இளம் பெண் கொலை செய்யப்படுகிறார். அதற்கான விசாரணையை தடய அறிவியல் துறையைச் சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரியான கதாநாயகி விஷ்ணுப்ரியா, அவருடைய நண்பரும் அதே துறையின் மற்றொரு அதிகாரியுமான கதாநாயகன் ராம் அருண் காஸ்ட்ரோ உதவியுடன் ஆரம்பிக்கிறார்.

முதல் விசாரணையில் அந்தப் பெண்ணுடன் லிவிங் டு கெதர் ஆக இருந்தவர் விசாரிக்கப்படுகிறார். விசாரணை முடிந்ததுமே அவர் தற்கொலை செய்து கொள்கிறார்.

கொலை நடந்த பகுதியைச் சேர்ந்த மேலும் சிலரை கதாநாயகி விஷ்ணுப்ரியாவும், கதாநாயகன் ராம் அருணும் விசாரித்து வருகிறார்கள். உண்மையான கொலை குற்றவாளிகளை அவர்கள் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் இந்த திரைப்படத்தின்
மீதிக்கதை.

அறிமுகப் திரைப்படத்திலேயே போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் கதாநாயகன் ராம் அருண் காஸ்ட்ரோ. ஆரம்பத்திலிருந்தே தன்னை மிகத் திறமையான அதிகாரியாக அவரே தற்பெருமையாக நினைத்துக் கொண்டு நடப்பது போல இருக்கிறது அவரது கதாபாத்திரம். தன் உயரதிகாரியிடம் கூட அப்படியே நடந்து கொள்கிறார்.

நிஜத்தில் இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பேயில்லை. ஒரு கட்டத்தில்தான் அவர் யதார்த்த நடிப்புக்குள் ஐக்கியமாக முயற்சிக்கிறார். கொஞ்சம் அடக்கி நடித்திருந்தால் அவர் கதாபாத்திரம் கண்டிப்பாக பேசப்பட்டிருக்கும்.

கதாநாயகன் ராம் அருண் கதாபாத்திரத்திற்கும், நடிப்பிற்கும் நேரெதிராக இருக்கிறது கதாநாயகி விஷ்ணுப்ரியாவின் நடிப்பும் கதாபாத்திரமும். அவருக்கு டப்பிங் கொடுத்திருப்பவர் மலையாள வாடையுடன் கொடுக்காமல் இருந்திருந்தால் இந்தக் கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் கவர்ந்திருக்கும். கதாநாயகி விஷ்ணுப்ரியாவின் கதாபாத்திரத்தை மலையாளியாகக் காட்ட வேண்டியதன் அவசியம் என்னவென்று தெரியவில்லை.

அவருக்குக் காக்கி சட்டை அணிய வைக்காமல், கலர், கலர் உடைகளை அணிய வைத்து கிளாமராகக் காட்ட முயற்சித்து அந்தக் கதாபாத்திரத்தின் கண்ணியத்தையும் குறைத்துவிட்டார்கள்.

Read Also  சென்னை பழனி மார்ஸ் - திரை விமர்சனம்

லிஜேஷ் அப்பாவி காதலனாக நடித்து, தவறு செய்துவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சியில் தற்கொலை செய்து கொண்டு அனுதாபத்தை ஏற்படுத்துகிறார்.

லிங்கா கதாபாத்திரமும், அதில் அவரது நடிப்பும் எரிச்சலூட்டுகின்றன. மற்ற நடிகர்கள் ஓரிரு காட்சிகளில் மட்டும் வந்து போகிறார்கள்.

ஒரு கொலை, அதைச் செய்த குற்றவாளி யார், அதைக் கண்டுபிடிக்க முயலும் போலீஸ் இதுதான் படத்தின் ஒரு வரி கதை. இருந்தாலும் திரைக்கதையில் அடுத்து என்ன என்ற சஸ்பென்ஸ் இருப்பதால் யார் கொலை செய்திருப்பார்கள் என்ற யூகத்துடன் ரசிக்கும் நமக்கு கிளைமாக்சில் ஒரு அதிர்ச்சி கொடுக்கிறார் இயக்குனர். பாவல் நவகீதன்

இப்படியான சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் சாதிப் பிரச்சினையை வலிய நுழைத்து, படு பாதகக் கொலை எனச் சொல்லி அதுவரை த்ரில்லர் கதையாக இருந்த படத்தை சாதிப் படமாக மாற்றிவிட்டார் இயக்குனர். பாவல் நவகீதன்
அதுவே படத்திற்கு மைனஸாகவும் அமைந்துவிட்டது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் விசாரணை அறையில் நடக்கின்றன. அது ஒரு டிராமா எபெக்டைத்தான் கொடுக்கிறது. மேக்கிங்கிலும், கிளைமாக்சிலும் மாற்றத்தைக் கொடுத்திருந்தால் ஒரு சுவாரசிய த்ரில்லரை ரசித்த அனுபவம் கிடைத்திருக்கும்.

வி 1 மர்டர் கேஸ் – சுமாரான மர்டர்