வெப் சீரிசில் நடித்தது ஏன்?: நடிகர் பிரசன்னா விளக்கம்

நடிகர் பிரசன்னா திரவம் என்ற வெப் சீரிசில் நடித்துள்ளார். இதில் அவருடன் இந்துஜா, சாயா சிங், ஜான் விஜய், காளி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். இதனை ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா இயக்கி உள்ளார். இது மூலிகை பெட்ரோலை கண்டுபிடித்த ராமரின் வாழ்க்கையை தழுவிய கற்பனை கதை. வெப் சீரிசில் நடித்தது ஏன் என்பது குறித்து பிரசன்னா கூறியதாவது:

சினிமாவின் அடுத்த கட்டம், அல்லது அதன் நீட்சி என்று வெப் சீரிசை சொல்லலாம். இதில் நடிப்பதால் சினிமா இமேஜ் குறைந்து விடாது. சிலர் வெப் சீரிசில் நடிப்பதை டி.வி சீரியலில் நடிப்பது போன்று பார்க்கிறார்கள். அது தவறு. அது வேறு, இது வேறு, வெப் சீரிசும் சினிமா மாதிரிதான். பணம் கொடுத்து தான் பார்க்க முடியும். தணிக்கை இல்லாததால் சொல்ல வந்ததை துணிச்சலாக சொல்ல முடியும்.

திரவம் சீரியலில் நான் ஒரு கிராமத்து விஞ்ஞானியாக நடித்திருக்கிறேன். சின்னதாக தொப்பை வைத்து, கண்ணாடி போட்டு தளர்ந்த ஒரு நடுத்தர வயதை தாண்டியவனாக நடித்திருக்கிறேன். இதுபோன்று என்னால் சினிமாவில் நடிக்க முடியாது. நடித்தால் குணசித்திர நடிகராக்கி ஒதுக்கி வைத்து விடுவார்கள். சில புதிய முயற்சிகளை வெப் சீரிசில் செய்து பார்க்கலாம். வெப் சீரிஸ்களால் சினிமா அழிந்து விடும் என்பதெல்லாம் அதீத கற்பனை. டி.வி.வந்தபோதும் அப்படித்தான் சொன்னார்கள், டிஜிட்டல் வந்தபோதும் அப்படித்தான் சொன்னார்கள். நடந்து விட்டதா?

வெப் சீரிஸ்களுக்கு தணிக்கை இல்லை என்பதால் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது. படைப்பாளிகள் சுய கட்டுப்பாடுடனும், சமூக பொறுப்புடனும் இருக்க வேண்டும். தணிக்கையால் சில பிளஸ், மைனஸ்கள் இருப்பது மாதிரி தணிக்கை இல்லாவிட்டாலும் சில பிளஸ், மைனஸ்கள் இருக்கிறது. என்றார்.