வெற்றிப் படங்களின் வரிசையில் இணையும் ‘கொலைகாரன்’
ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, அர்ஜுன், அஷிமா நர்வால் மற்றும் பலர் நடித்து பத்து நாட்களுக்கு முன்பு வெளிவந்த படம் ‘கொலைகாரன்’. இதற்கு முன் விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்த படங்கள் தோல்வி அடைந்த நிலையில் இந்தப் படத்தின் டிரைலரைப் பார்த்ததும் ஒரு நம்பிக்கை வந்தது. படத்தைப் பார்த்து தயாரிப்பாளர் தனஞ்செயன் படத்தின் தமிழ்நாட்டு உரிமையை வாங்கினார்.
விறுவிறுப்பான த்ரில்லர் ஆக அமைந்த படம் ரசிகர்களிடம் சரியானபடி சென்று சேர்ந்தது. படத்தில் இருந்த வித்தியாசமான கதை, திரைக்கதை, நடித்தவர்களின் பங்கு அனைத்துமே சிறப்பாக இருந்த காரணத்தால் படமும் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றது.
கடந்த வாரம் ஜுன் 14ம் தேதி வெளிவந்த படங்கள் ஏமாற்றியதால் ‘கொலைகாரன்’ இரண்டாவது வாரத்திலும் சிறப்பாகவே ஓடியுள்ளதாம். இந்த வருடத்தில் இதுவரை வெளிவந்த படங்களில் ‘விஸ்வாசம், பேட்ட, தடம், காஞ்சனா 3’ ஆகிய படங்கள்தான் லாபகரமான படமாக அமைந்தது என்பது வினியோகஸ்தர்கள் தரப்பில் சொல்லப்பட்டது.
‘கொலைகாரன்’ பத்து நாள் முடிவில் 13.5 கோடியை வசூலித்து அந்தப் பட்டியலில் இணைந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், படம் லாபத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறதாம். இப்படத்தின் வசூலும், வரவேற்பும் விஜய் ஆண்டனிக்கு மீண்டும் ஒரு திருப்புமுனையைக் கொடுத்திருக்கிறது.