ஸ்பாட் விமர்சனம்

போலீஸ் அதிகாரியின் மகனான நாயகன் கௌசிக், தன்னுடைய பிறந்த நாளை நண்பர்களுடன் பப்பில் கொண்டாடி வருகிறார். அதே பப்பில் இருக்கும் நாயகி அக்னி பவாரை, வில்லனாக இருக்கும் நாசர் அவரது அடியாளான கராத்தே கோபாலனை வைத்து, கொலை செய்ய முயற்சி செய்கிறார்.

இதை பார்க்கும் கௌசிக், கராத்தே கோபாலனிடம் இருந்து அக்னி பவாரை காப்பாற்றி தன்னுடைய நண்பர்களுடன் காரில் அழைத்து செல்கிறார். இவர்களை துரத்திக் கொண்டு கராத்தே கோபாலனும் செல்கிறார். சென்னையில் இருந்து ஆந்திரா வரை கௌசிக்கின் காரை துரத்திக் கொண்டு கராத்தே கோபாலன் செல்கிறார்.

அக்னி பவாரை கொல்ல தடையாக இருக்கும் கௌசிக்கையும், அவரது நண்பர்களையும் கொலை செய்ய சொல்கிறார் நாசர். ஒரு கட்டத்தில் கௌசிக்கின் கார் டீசல் இல்லாமல் நிற்க, நண்பர்களில் ஒருவர் தனியாக செல்ல, அவரை கராத்தே கோபாலன் கொன்று விடுகிறார்.

இதனால் விரக்தியடையும் கௌசிக், கராத்தே கோபாலன் துரத்தும் காரணத்தை அக்னி பவாரிடம் கேட்க, தன்னுடைய வாழ்க்கையில் நடந்தவற்றை அக்னி பவார் விவரிக்கிறார்.

கடைசியில், அக்னி பவாரின் பிரச்சனையை கௌசிக் தீர்த்து வைத்தாரா? அக்னி பவாரை கராத்தே கோபாலன் துரத்த காரணம் என்ன? அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக வரும் கௌசிக், துறுதுறு இளைஞனாக நடித்திருக்கிறார். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் திறம்பட நடித்திருக்கிறார். நாயகி அக்னி பவார் நடிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

தன்னுடைய அனுபவ நடிப்பால் பளிச்சிடுகிறார் நாசர். வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் கராத்தே கோபாலன். இவர் நாயகன் கௌசிக்கின் தந்தையாவார். சரவணன், சங்கிலி முருகன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

வித்தியாசமான கதைக்களத்துடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வி.ஆர்.ஆர். படத்தின் முதற்பாதி சேஸிங்கிலேயே செல்கிறது. பிற்பாதியை மட்டுமே ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. சேஸிங் காட்சிகளை குறைத்திருந்தால், கூடுதலாக ரசித்திருக்கலாம்.

விஜய் சங்கர் இசையில் ஒரு பாடல் சிறப்பாக இருக்கிறது. மற்ற பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். மோகன் ராஜ்ஜின் ஒளிப்பதிவு ரசிக்கும் விதம்.