ஹவுஸ் ஓனர் – திரை விமர்சனம்
நடிப்பு – ஆடுகளம் கிஷோர், பசங்க கிஷோர், ஸ்ரீரஞ்சனி, லவ்லின் மற்றும் பலர்
தயாரிப்பு – மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ்
இயக்கம் – லட்சுமி ராமகிருஷ்ணன்
இசை – ஜிப்ரான்
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா
வெளியான தேதி – 28 ஜுன் 2018
ரேட்டிங் – 3/5
தமிழ் திரைப்பட உலகில் பெண் இயக்குனர்கள் மிக மிகக் குறைவு. இன்றைய காலகட்டத்தில் தொடர்ந்து தன்னுடைய நான்காவது படத்தை ஒரு பெண் இயக்குனர்
லட்சுமி ராமகிருஷ்ணன்
இயக்கியிருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயமல்ல.
லட்சுமி ராமகிருஷ்ணன்
இயக்கத்தில் வெளிவந்துள்ள ஹவுஸ் ஓனர் படத்தை போல் பெரிய இயக்குனர் கூட யோசித்திருப்பாரா என்பது சாத்தியமில்லை. 2015ம் ஆண்டில் சென்னையில் ஏற்பட்ட பெரு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு வயதான தம்பதியினரைப் பற்றிய படம் தான் இந்த ஹவுஸ் ஓனர்.
ஒரு நான்கு கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு வீட்டுக்குள்ளேயே அதிகமான காட்சிகள் நகர்ந்தாலும் அதில் ஒரு உயிரோட்டம், ஒரு உணர்வு, ஒரு காதல் இப்படி அனைத்தையும் மிக இயல்பாகக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் இதற்கு முன் அவர் இயக்கிய ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி ஆகிய படங்களைவிட இந்தப் படம் அவருடைய இயக்கத் திறமைக்கு மிகச் சரியான படமாக அமையும். என்று தெரிகிறது
கிஷோர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. மனைவி ஸ்ரீரஞ்சனியுடன் தான் சொந்தமாகக் கட்டிய வீட்டில் வசித்து வருகிறார். அது தன்னுடைய வீடு என்பதில் மிகவும் பெருமிதமாய் இருப்பவர். கிஷோருக்கு மறதி நோயான அல்சீமர் நோய் இருக்கிறது. அவருக்கு தற்போதைய நினைவுகளை விட அவருக்கு திருமணமான காலம்தான் அடிக்கடி ஞாபகத்தில் வந்து போகிறது. நல்ல கனமழைக் காலத்தில் அவர்களது வீட்டிற்குள் வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக நுழைகிறது. அதிலிருந்து அந்த வயதான தம்பதி தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
அல்சீமர் நோய் வந்த ஒருவர் இப்படித்தான் இருப்பாரா, இப்படித்தான் நடப்பாரா, இப்படித்தான் கோபப்படுவாரா என அந்த கதாபாத்திரத்தை அப்படியே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் கிஷோர். மனைவி என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ளாமல் தான் என்ன நினைக்கிறோமோ அதை மட்டுமே செய்யும் மனோபாவம். ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிக்கேயுரிய மிடுக்கு. ஞாபகத்தில் வந்து செல்லும் தன் இளமைக் கால நினைவுகளைப் பற்றி முகத்தில் காட்டும் மகிழ்ச்சி என தேசிய விருதுக்கு இப்போதே விண்ணப்பித்துவிடலாம் கிஷோர்.
வயதானாலும், தன்னை மனைவி என்று ஞாபகம் கொள்ளாமல் புறக்கணித்தாலும் கணவன் கிஷோரை எந்த நிமிடத்திலும் கோவித்து கொள்ளாத, மனைவி என்ற பாசத்தைக் காட்டக் கூடிய உன்னதப் பெண்ணாக ஸ்ரீரஞ்சனி. கிஷோரின் நடிப்புக்கு ஈடு கொடுக்கும் மிகச் சரியான நடிப்பு. இவருக்கான பின்னணி குரலை இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் தான் கொடுத்திருக்கிறார். மலையாள பிராமண பாஷை என்பதால் சில வார்த்தைகள் என்னவென்று நமக்கும் புரியவில்லை.
இளமைக்கால கிஷோர் ஆக பசங்க கிஷோர். இளமைக்கால ஸ்ரீரஞ்சனியாக லவ்லின். இரண்டு பேருக்கும் அப்படி ஒரு ஜோடிப் பொருத்தம். பெண் பார்க்கும் படலத்தில் ஆரம்பித்து இருவரும் சென்னையில் சொந்த வீட்டில் வசிக்க வரும் வரையிலும் அவர்களுக்கிடையிலான காட்சிகள் ஒவ்வொன்றிலும் காதலும், அன்பும், பாசமும் அவ்வளவு அன்யோன்யமாய் இருக்கின்றன. லவ்லினுக்கு இது அறிமுகப் படமாம் நம்ப முடியவில்லை.
படத்தின் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணா சேகர், இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒலி வடிவமைப்பாளர் தபஸ் நாயக் ஆகியோர் படத்திற்கு கூடுதல் பலத்தைக் கொடுத்திருக்கிறார்கள். படத்தின் கலை இயக்குனர் மிகவும் குறிப்பிட வேண்டியவர். கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்குள் மழை நீர் வருவது உள்ளிட்ட காட்சிகளில் அதை செட் என்று தெரியாத அளவிற்கு வடிவமைத்திருக்கிறார்.
ஆரம்பம் முதலே காதல், பாசம் என நகரும் கதை கிளைமாக்சை நெருங்க நமக்கு இன்னும் ஒரு அழுத்தத்தை, வலியைக் கொடுத்திருக்க வேண்டும். வீட்டிற்குள் வெள்ளம் அதிகப்படியாக வந்ததும் அந்த வயதான ஜோடிக்கு என்ன ஆனது என்பதை நம் யூகத்தின் அடிப்படையில் இயக்குனர் கிளைமாக்சாக முடித்திருப்பது அவ்வளவு வலியைத் தரவில்லை. அதைத்தான் அவர் இன்னும் அழுத்தமாகக் காட்சிப்படுத்தியிருக்க வேண்டும். அவ்வளவு தூரம் திரைக்கதையை அற்புதமாய் கொண்டுவந்துவிட்டு கிளைமாக்சில் விட்டேத்தியாக விட்டிருக்கத் தேவையில்லை.
ஹவுஸ் ஓனர் – நல்ல படத்தை கண்டிப்பாக பாராட்டலாம்