10 தியேட்டர்களுக்கு இனி புதுப்படங்கள் இல்லை! – விஷால் அதிரடி முடிவு

பல கஷ்டங்களை கடந்து படமெடுத்து வெளியிடும் தயாரிப்பாளர்களுக்கு ஆன்லைன் பைரசி பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.

குறிப்பாக ரிலீசான முதல் நாளே புதுப்படங்கள் இணையதளங்களில் வெளியாவதால் தயாரிப்பாளர்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.

இதற்கு காரணமான இணையதளங்களை வேறருக்கும் முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாலும், இன்னும் அதில் முழுமையான வெற்றி கிடைக்கவில்லை.

அதே சமயம் இதுபோன்ற இணையதளங்களுக்கான புதுப்படங்கள் தியேட்டர்களில் தான் திருட்டுத்தனமாக படம்பிடிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது என்று கடந்த சில மாதங்களாகவே ‘மனுஷனா நீ’ படத் தயாரிப்பாளர் கஸாலி உள்ளிட்ட சில தயாரிப்பாளர்கள் ஆதாரங்களை வெளியிட்டு வந்தனர்.
அது உண்மை என்று தெரிய வந்ததையடுத்து தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகருமான விஷால் தனது ‘சண்டக்கோழி 2’ படத்திலிருந்து ஒரு அதிரடி முடிவை எடுத்திருக்கிறார்.

அதன்படி திருட்டுத்தனமாக பைரசி எடுக்கப்பட்டு ஆதாரத்துடன் உறுதி செய்யப்பட்ட தியேட்டர்களான

கிருஷ்ணகிரி முருகன் – ‘மனுசனா நீ’
கிருஷ்ணகிரி நயன்தாரா – ‘கோலிசோடா 2’
மயிலாடுதுறை கோமதி – ‘ஒரு குப்பைக் கதை’
கரூர் எல்லோரா – ‘ஒரு குப்பைக் கதை’
ஆரணி சேத்பட் பத்மாவதி – ‘மிஸ்டர் சந்திரமௌலி’
கரூர் கவிதாலயா – ‘தொட்ரா’
கரூர் கவிதாலயா – ‘ராஜா ரங்குஸ்கி’
பெங்களூரு சத்யம் – ‘இமைக்கா நொடிகள்’
விருத்தாசலம் ஜெய் சாய் கிருஷ்ணா தியேட்டர் – ‘சீமராஜா’
மங்களூர் சினிபொலிஸ் – ‘சீமராஜா’

ஆகிய 10 தியேட்டர்களுக்கு இனி எந்த விதமான ஒத்துழைப்பும் வழங்குவதில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்து அதனை கியூப் (qube) நிறுவனத்திற்கும் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி வருகிற அக்டோபர் 17, 18-ம் தேதிகளில் வெளியாகும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்களும் கியூப் நிறுவனத்திற்கு கடிதம் மூலமும், மின்னஞ்சல் மூலமாகவும் தங்களது திரைப்படங்களை மேற்படி திரையரங்குகளில் திரையிட வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்க உறுப்பினர்கள் அனைவரும் மேற்கண்ட முடிவிற்கு ஆதரவு தரும் வகையில் இனி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளியாகும் எந்த ஒரு திரைப்படத்தையும் மேற்கண்ட திரையரங்குகளில் திரையிட வேண்டாம் என்று கியூப் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சக தயாரிப்பாளர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.