13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார் நடிகை விஜயசாந்தி

தமிழில் மன்னன், நெற்றிக் கண் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் விஜய சாந்தி. இவர் இதுவரை 180க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். பல மொழிகளிலும் நடித்திருக்கும் இவர், சில காலம், தீவிர அரசியலிலும் ஈடுபட்டார். 
அரசியல் ஆர்வத்தால், சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்த விஜயசாந்தி, தற்போது, 13 ஆண்டுகளுக்குப் பின், தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கிறார். இவர், ஹிலாடி கிருஷ்ணுடு என்ற தெலுங்கு படத்தில்தான் முதன் முதலில் நடித்திருந்தார். அவர் நடிகர் கிருஷ்ணாவுடன் தான் அந்தப் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது அவர், கிருஷ்ணாவின் மகனும் பிரபல தெலுங்கு நடிகருமான மகேஷ் பாபுவுடன் தான் இணைந்து புதிய தெலுங்கு படமான சரிலேரு நீக்கெவரு என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை, அனில் ரவிபுடி என்பவர் இயக்குகிறார். அனில் சுங்கரா, தில் ராஜூ, மகேஷ் பாபு ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வரும் பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டிருக்கும் இந்தப் படத்தின் படபிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.