136 ரன்னில் சுருட்டி இலங்கையை ஊதித்தள்ளியது நியூசிலாந்து
.உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி, இலங்கையை 136 ரன்னில் சுருட்டி ஊதித்தள்ளியது.
உலக கோப்பை கிரிக்கெட்
12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்–4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் கார்டிப்பில் உள்ள சோபியா கார்டனில் நேற்று நடந்த 3–வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணி, பலம் வாய்ந்த நியூசிலாந்தை எதிர்கொண்டது. ஆடுகளத்தில் புற்கள் பச்சைபசேல் என்று காணப்பட்டது. இதனால் ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சு எடுபடும் என்பதை தெளிவாக உணர்ந்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ‘டாஸ்’ ஜெயித்ததும் தயக்கமின்றி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இலங்கை திணறல்
அடுத்த ஒரு மணி நேரத்தில் எதிர்பார்த்தபடியே ஆட்டத்தின் போக்கு அமைந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் மேட் ஹென்றி, டிரென்ட் பவுல்ட், லோக்கி பெர்குசன் ஆகியோர் இலங்கை பேட்ஸ்மேன்களை மிரட்டினர். புயல்வேகத்தில் சீறிய பந்து ஆடுகளத்தில் நன்கு ஸ்விங்கும் ஆனதால் பேட்ஸ்மேன்கள் அதை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடினர்.
முதல் ஓவரிலேயே திரிமன்னே (4 ரன்) எல்.பிடபிள்யூ. ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் கருணாரத்னேவும் 9 ரன்னில் வெளியேறி இருக்க வேண்டியது. அவருக்கு அதிர்ஷ்டம் துணை நின்றது. பவுல்ட் வீசிய பந்து ஸ்டம்பை உரசிய போது, அதன் மீது இருந்த பெய்ல்ஸ் கீழே விழாததால் கண்டத்தில் இருந்து தப்பினார்.
கருணாரத்னேவும், விக்கெட் கீப்பர் குசல் பெரேராவும் அணியை சற்று மீட்பது போல் தெரிந்தது. ஸ்கோர் 46 ரன்களை எட்டிய போது குசல் பெரேரா (29 ரன்) ஆட்டம் இழந்ததும் மறுபடியும் இலங்கை அணி ஊசலாடியது. கேப்டன் கருணாரத்னே நிலைத்து நின்று ஆடினாலும், மறுபுறம் விக்கெட்டுகள் கொத்து கொத்தாக விழுந்தன. குசல் மென்டிஸ் (0), தனஞ்ஜெயா டி சில்வா (4 ரன்), மேத்யூஸ் (0) ஆகிய முன்னணி வீரர்களும் சோபிக்கவில்லை. இங்குள்ள ஆடுகளங்களில் தொடக்கத்தில் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழக்காமல் பொறுமையாக விளையாடுவது அவசியம். போக போக ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்ததாக மாறி விடும். அதன் பிறகு அடித்து நொறுக்கலாம். ஆனால் அதற்கு நியூசிலாந்து பவுலர்கள் இடம் கொடுக்கவில்லை.
136 ரன்னில் ஆல்–அவுட்
29.2 ஓவர் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை அணி 136 ரன்னில் சுருண்டது. கருணாரத்னே 52 ரன்களுடன் (84 பந்து, 4 பவுண்டரி) கடைசி வரை களத்தில் இருந்தார். இலங்கை அணி ஒரு காலத்தில் சாம்பியன் அணி என்றாலும் சமீப காலமாக கூட்டு முயற்சி இல்லாமை, அனுபவமின்மை, ஆட்டத்திறன் பாதிப்பு ஆகியவற்றால் கத்துக்குட்டி அணி போல் தடுமாறி வருகிறது. அவர்களின் பலவீனம் உலக கோப்பையின் முதல் ஆட்டத்திலேயே வெளியாகி இருப்பது அந்த நாட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை அணியின் மோசமான ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 1979–ம் ஆண்டு உலககோப்பையில் அந்த நாட்டு அணிக்கு எதிராக 189 ரன்கள் எடுத்ததே இலங்கையின் குறைந்த ஸ்கோராக இருந்தது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, பெர்குசன் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
நியூசிலாந்து வெற்றி
பின்னர் சுலப இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் மார்ட்டின் கப்திலும், காலின் முன்ரோவும் இலங்கையின் பந்து வீச்சை வறுத்தெடுத்தனர். ஷாட் பிட்ச்சாக வீசி பந்துகளை எகிற வைத்த போதிலும் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.
நியூசிலாந்து அணி 16.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 137 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது. கப்தில் 73 ரன்களுடனும் (51 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), முன்ரோ 58 ரன்களுடனும் (47 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர். நியூசிலாந்து பவுலர் மேட் ஹென்றி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
நியூசிலாந்து அணிக்கு 3–வது முறையாக ‘மெகா’ வெற்றி
*உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வாகை சூடுவது இது 12–வது முறையாகும். நியூசிலாந்து அணி இத்தகைய மெகா வெற்றியை 3–வது முறையாக ருசித்து இருக்கிறது. இதற்கு முன்பு 2011–ம் ஆண்டு உலக கோப்பையில் ஜிம்பாப்வே, கென்யாவுக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதே சமயம் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பணிந்திருப்பது இது தான் முதல்தடவையாகும்.
*இந்த ஆட்டத்தில் இலங்கை அணி 136 ரன்னில் அடங்கிப்போனது. உலக கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணியின் 6–வது குறைந்த ஸ்கோர் இதுவாகும்.
*இலங்கை தொடக்க ஆட்டக்காரர் கருணாரத்னே (52 ரன்*) தொடக்க ஆட்டக்காரராக இறங்கி அனைவரிடமும் ஜோடி சேர்ந்து விளையாடி அவுட் ஆகாமல் இருந்தார். உலக கோப்பை தொடரில், ஒரு பேட்ஸ்மேன் தொடக்க ஆட்டக்காரராக களம் புகுந்து கடைசி வரை களத்தில் நிற்பது இது 2–வது நிகழ்வாகும். ஏற்கனவே வெஸ்ட் இண்டீசின் ரிட்லி ஜாக்கப்ஸ் (49 ரன்*) 1999–ம் ஆண்டு தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இவ்வாறு ஆடியிருக்கிறார்.
*ஒரு நாள் கிரிக்கெட்டில் கார்டிப் மைதானத்தில் இலங்கை அணி ஒரு போதும் வெற்றி பெற்றது கிடையாது. இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி அனைத்திலும் தோல்வியே தழுவியிருக்கிறது.
கேப்டன்கள் கருத்து
வெற்றிக்கு பிறகு நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில், ‘இந்த உலக கோப்பை போட்டியை நாங்கள் அருமையாக தொடங்கி இருக்கிறோம். ‘டாஸ்’ ஜெயித்ததும், இத்தகைய ஆடுகளத்தில் தொடக்கத்திலேயே விக்கெட் வீழ்த்தியதும் ஆட்டத்தின் போக்கை மாற்றுவதற்கு காரணமாக இருந்தது. எங்களது பவுலர்கள் இலங்கையை 30 ஓவர்களுக்குள் அடக்கியது அற்புதமான செயல்பாடு. இது போன்ற ஆடுகளத்தில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இருப்பதாக நினைக்கவில்லை. இரு முனையிலும் புதிய பந்தை பயன்படுத்தும் போது, தொடக்கத்தில் ஆடுகளம் கொஞ்சம் வேகப்பந்து வீச்சுக்கு உதவிகரமாக இருக்கக்கூடும் என்பது ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பது தான்’ என்றார்.
இலங்கை கேப்டன் கருணாரத்னே கூறுகையில், ‘டாஸில் வென்று இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இங்குள்ள சூழலில் 136 ரன்கள் என்பது நிச்சயம் போதுமானது அல்ல. நானும், குசல் பெரேராவும் நன்றாக பேட் செய்தோம். ஆனால் விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்தது பின்னடைவாக போனது. காலையில், ஆடுகளத்தில் பந்து சீறிப்பாய்ந்ததுடன் ஸ்விங்கும் ஆனது. இந்த சூழலை நியூசிலாந்து பவுலர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். குதூகலமான ஆட்டத்தை கண்டுகளிக்கவே ரசிகர்கள் வருகை தருகிறார்கள். எனவே அடுத்து வரும் ஆட்டங்களில் பேட்டிங்குக்கு ஏற்ற ஆடுகளங்களை எதிர்நோக்குகிறோம்’ என்றார்.