‘2.O’ வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம்  ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’..!

 
கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ ‘.
 
 ‘நீ என்ன மாயம் செய்தாய்’, ‘மித்ரா’  ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும்,  காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படம் மூலம் பிரபலமான நடிகை ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். 
மேலும் நடிகை சச்சு, இயக்குனர் சரவண சுப்பையா,  நடிகர்கள் லிவிங்ஸ்டன், ஆர். சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ், மீசை ராஜேந்திரன்  உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். 
‘நாகேஷ் திரையரங்கம்’ புகழ் இ.ஜே. நவ்ஷாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்லஸ் தனா இசையமைத்துள்ளார்.
 
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதுகுறித்து  பேரழகி ஐ.எஸ்.ஓ படத்தின் இயக்குனர் விஜயன் கூறியதாவது, 
 
” பேரழகி ஐ.எஸ்.ஓ  ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம். சீரியஸாக இல்லாமல், மிக ஜாலியாக காமெடி கலந்து இப்படத்தை எடுத்துள்ளேன். இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம். ஷில்பா மஞ்சுநாத் இதில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். 
 
படத்தின் கதைப்படி, முந்தைய காலத்தில் வாழ்ந்த ராஜா ஒருவர் தான் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அரண்மனை வைத்தியர்களை கொண்டு ஒரு மருந்து கண்டுப்பிடிக்கிறார். பல ஆண்டுகள் கழித்து, அந்த மருத்துவ குறிப்பு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடம் கிடைக்கிறது. 
 
ஷில்பாவின் பாட்டியாக வரும் சச்சு, அந்த நிறுவனத்தை அணுகி தன்னை இளமையாக மாற்றிக்கொள்ளகிறார். பாட்டி சச்சு, இப்போது அழகான பேத்தியாக மாறிவிடுகிறார். ஷில்பா தான் அந்த ரோலை செய்துள்ளார். அதன் பிறகு நடக்கும் குழப்பங்களை, காமெடியாக கூறியுள்ளோம். ஒரு ஜாலியான சயின்ஸ் பிக்ஷன் படமாக  பேரழகி ஐ.எஸ்.ஓ  இருக்கும். 
 
ஷில்பா தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். மொத்தம் 50 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். விஜிபியில் அரண்மனை செட்டு போட்டு சில காட்சிகளை படமாக்கினோம். அது விஜிபி என்று தெரியாத அளவுக்கு கிராபிக்ஸ் வேலைகள் செய்துள்ளோம். குறைந்த பட்ஜெட்டில் நல்ல படத்தை எடுத்துள்ளோம்”, என விஜயன் கூறினார்.
 
வரும் மே-24முதல் இந்த  திரைப்படம் வெளியாகிறது.