ரஜினிகாந்தை கிண்டல் செய்ததை என்னால் ஏற்க முடியவில்லை… ’கோமாளி’ படத் தயாரிப்பாளரிடம் கமல் வருத்தம்!

அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், கே எஸ் ரவிக்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘கோமாளி’. இப்படத்தினை ஐசரி வேலன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில் கதைப்படி கோமாவில் இருந்த நாயகன் ஜெயம் ரவி, 16 ஆண்டுகள் கழித்து 2016ல் தான் கண் விழிக்கிறார். ஆனால், தான் கோமாவில் விழுந்ததை, நண்பர் யோகி பாபு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் நம்ப மறுக்கிறார் நாயகன். இதனால், நண்பனை நம்ப வைக்க, யோகிபாபு டிவியை ஆன் செய்ய, அதில், நடிகர் ரஜினிகாந்த், ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்கிறார். அதைப் பார்க்கும் ஜெயம் ரவி, ‘யார ஏமாத்த பாக்குறீங்க இது 1996ல் சொன்னது’ என்று பதில் அளிக்கிறார்.

இக்காட்சி ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வருத்தம் அளித்திருக்கிறார் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “நம்மவர் அவர்கள் இன்று காலை கோமாளி ட்ரைலர் பார்த்தார். அதில் ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவதை பற்றிய விமர்சனத்தை பார்த்தவர் உடனே தயாரிப்பாளருக்கு போன் செய்து இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டார். நட்பின் வெளிப்பாடா நியாயத்தின் குரலா” என்று குறிப்பிட்டுள்ளார்.