90 எம்.எல் சினிமா விமர்சனம்

தொடர்ந்து ஒரே மாதிரியான வாழ்க்கை. போராடிக்கும் வாழ்க்கை. ஏன் மாற்றத்துக்கு மாறக் கூடாது என்று முடிவு செய்த பெண்கள் தாங்கள் நினைத்த வாழ்க்கையை வாழத் துவங்குகின்றனர்.

90 ML படத்தின் தமிழ் டீசர் வெளியானபோது சமூகத்தில் ஒரு தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பெண்கள் சிகரெட் குடிக்கலாமா? மது அருந்தலாமா? தங்கள் இஷ்டப்படி செக்ஸ் வைத்துக் கொள்ளலாமா? என்று விவாதிக்கப்பட்டது. இன்னும் பண்பாடு, கலாச்சாரத்தில் இருந்து விலகாத, இந்தியப் பெண்கள் மத்தியில் இப்படி ஒரு படம் வந்தால் எப்படி எதிர்ப்பு கிளம்பாமல் இருக்கும். எதிர்ப்பு இருந்தது. பெண்ணியம் என்ற பெயரில் சமூக சீர்கேடு நடக்கிறது என்று விவாதிக்கப்பட்டது.

இன்று வெளியான இந்தப் படத்தில் அனைத்தும் கலந்த கலவையாக அதாவது, செக்ஸ் வாழ்க்கை, அதில் உள்ள குறைகள், நிறைகள் என்று கதை செல்கிறது.

கதை தாமரை (பொம்மு லட்சுமி) மற்றும் அவரது கணவருடன் துவக்குகிறது. இவர்கள் மனநல மருத்துவர் ஒருவரை சந்திக்கின்றனர். நடிகை தேவதர்ஷிணி மனநல மருத்துவராக வருகிறார். தாமரை மது அருந்துவதால் அவரிடம் ஆலோசனை பெறச் செல்கின்றனர். இந்த நேரத்தில்தான் ரிடா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் ஓவியாவின் பரிட்சம் தாமரைக்கு கிடைக்கிறது. தாமரைக்கு மட்டுமல்ல, ஓவியா குடியிருக்கும் அபார்ட்மெண்டில் இருந்து காஜல் (மசூம் சங்கர்), பாரு (ஸ்ரீ கோபிகா), சுகன்யா (மோனிஷா) ஆகியோரின் பரிட்சமும் ஓவியாவுக்கு கிடைக்கிறது. இதற்கிடையே ஓவியா தனது நண்பிகளுடன் குடிப்பது, சிகரெட் பிடிப்பது என்று நகர்ந்து கொண்டு இருக்கும்போது, தனது ஆண் நண்பரை விட்டுப் பிரிகிறார்.

இவர்கள் அனைவரும் ஓவியா தலைமையில் மது அருந்திவிட்டு தங்களது சொந்தக் கதைகளை பகிர்ந்து கொள்கின்றனர். அப்போது, அவர்கள் எவ்வாறு தங்களது வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அவர்ளுக்கு ஓவியா அறிவுரை கூறுகிறார். மேலும் அவர்களது பிரச்சனையை தீர்ப்பதாக ஓவியா உறுதி அளிக்கிறார். அந்தப் பிரச்சனைகள் தீர்க்கப்படுகிறதா என்பதுதான் மீதக் கதை…

இதுபோன்ற கதையம்சத்தில் முன்பு ஆண்களுக்கான படம் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தில் பெண்களின் கதை சித்தரிக்கப்பட்டுள்ளது. பெண்களின் விடுதலை என்ற பெயரில் இந்தப் படத்தில் காட்டப்படும் பல காட்சிகள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தும். எமோஷனல் காட்சிகள் படத்தில் மிஸ் ஆகிறது.

ஓவியா இந்தப் படத்தின் கதைக்கு ஒத்துப் போகிறார். சிம்பு சிறிய காட்சியில் வந்து செல்கிறார் என்றாலும், படத்திற்கு வலு சேர்க்கிறது.