ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் 8 – ஆம் ஆண்டு சாதனைப் பெண்கள் விருது வழங்கும் விழா.

சென்னை 26 பிப்ரவரி 2021

சரித்திரம் படைத்த சாதனைப் பெண்கள் சங்கமிக்கும் மாபெரும் விருது வழங்கும் விழா மார்ச் 6-ந்தேதி சென்னையில் நடைபெறுகிறது._

ரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும். இதன் நிறுவனத் தலைவராக அரவிந்த் ஜெயபால் உள்ளார். இந்த அமைப்பு ஊடகங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக சமூக விழிப்புணர்வு கருத்துகளைக் கூறி வருவதன் மூலம் மிகவும் பிரபலமானது. குழந்தைகளுக்கு இலவச கல்வி ஊக்கத்தொகை, பெண்கள் முன்னேற்றத்தைக் கூறும் சாதனைப் பெண்கள் விருது, சாலையோரம் பசித்திருக்கும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் விருந்தாளி திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான ரீச் தீ பீச் திட்டம், போன்றவை ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நற்பணிகளுக்குச் சான்றுகளாகும்.

பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும் ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் சாதனைப் பெண்கள் விருது வழங்கும் விழா கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ரெயின்ட்ராப்ஸ் அமைப்புடன் இணைந்து வேலம்மாள் நெக்சஸ் குழுமம் மற்றும் ஸ்ரீ தங்கம் ஜுவல்லரி உடனிணைத்து வழங்கும் சாதனைப் பெண்கள் 8-ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை அரங்கத்தில் வருகின்ற மார்ச் 6-ந்தேதி பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களை பாராட்டி நடக்க இருக்கும் இந்த விழாவிற்கு ரெயின்டிராப்ஸ் அமைப்பின் நல்லெண்ணத் தூதராக செயல்பட்டுக் கொண்டிருக்கும், ஆஸ்கார் வென்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் சகோதரியும் இசையமைப்பாளரும், தயாரிப்பாளருமான ஏ.ஆர்.ரெஹானா தலைமை வகிக்க, ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் நிறுவனத்தலைவர் அரவிந்த் ஜெயபால் முன்னிலையில் பிரபல தொழிலதிபர்கள், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்து கொண்டு சாதனைப் பெண்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்க உள்ளனர்.

இந்த ஆண்டுக்கான ரெயின்ட்ராப்ஸ் “வாழ்நாள் சாதனையாளர் விருது” 105 வயதான இயற்கை விவசாயி பாப்பம்மாள் மற்றும் 93-வயதான மூத்த சுதந்திர போராட்ட தியாகி லட்சுமி கிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

சிறந்த ஆளுமைக்கான விருதினை இளம் வனதுறை அதிகாரி சுதா ராமன் ஐ.எப்.எஸ் அவர்களும், சிறப்பு அங்கீகாரத்தை இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதி ஜோயிதா மோண்டல் அவர்களும், குயின் ஒப் தமிழ் சினிமா – சிறந்த நடிகைக்கான விருதினை ஊர்வசி அவர்களும், சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதினை இந்திய கூடைப்பந்து மகளிர் அணி கேப்டன் அனிதா பால்ராஜ் அவர்களும், நம்பிக்கையிற்கான விருதினை சென்னை உயர்நீதிமன்ற முதல் பார்வை சவால் கொண்ட வழக்கறிஞர் கற்பகம் அவர்களும், சிறந்த இயற்கை விசாயிக்கான விருதினை திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பரிமளா தேவி அவர்களும், வீரத்திற்கான விருதினை சென்னை விமான நிலையத்தின் முதல் பெண் தீயணைப்பு வீரர் ரெம்யா ஸ்ரீகாந்தன் அவர்களும், கருணைக்கான விருதினை தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதையே லட்சியமாகக் கொண்டு வாழும் மருத்துவர் டாக்டர் ரேணுகா ராமகிருஷ்ணன் அவர்களும் பெறுகின்றனர். இளம் விஞ்ஞானிக்கான விருதினை திருவண்ணாமலையை சேர்ந்த 14 வயது சிறுமி வினிஷா உமாசங்கர் பெறுகிறார். இந்தியாவின் முதல் பெண் கனரக வாகன ஓட்டுநர் ஜோதிமணி கௌதமன், தமிழகத்தின் முதல் பெண் 108 ஓட்டுநர் வீரலட்சுமி, இடுகாடுகளில் வெட்டியாள் வேலை செய்யும் கோவையை சேர்ந்த வைரமணி, பிரபல வீணை இசை கலைஞர் புண்யா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பெண் சாதனையாளர்கள் ‘சாதனை பெண்கள் விருதுகளை’ பெற உள்ளனர்.

ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நிறுவனத் தலைவர் அரவிந்த் ஜெயபால் இது குறித்துக் கூறுகையில், சர்வேதச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் சாதனைப் பெண்கள் விருது விழாவை நடத்துவதில் எங்களுக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. ஒவ்வொரு துறையிலும் இருக்கும் பெண் சாதனையாளார்களை அடையாளம் கண்டு நாங்கள் விருது வழங்கி வருகிறோம். இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக கொரோனா காலங்களில் அயராது மக்கள் சேவையாற்றிய பெண் முன்கள பணியாளர்களாகிய மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறை அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் என சிறந்த பத்து முன்கள பணியாளர்களையும் இவ்விழாவில் கௌரவிக்க உள்ளோம். ஆதரவற்ற ஒவ்வொரு பெண் குழந்தைகளின் படிப்பு மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றுக்கு எங்களது ‘ரெயின்டிராப்ஸ்’ அமைப்பு என்றென்றும் பக்கபலமாய் இருக்கும் என்றார்.

error: Content is protected !!