இயக்குனர் இமயம் பாரதிராஜா மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி !
இயக்குனர் இமயம் பாரதிராஜா மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி !
சென்னை 10 ஜூன் 2026 ஆயிரமாண்டுகள் கழித்து தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுதும்போது, மிகச்சிறந்த 10 இயக்குநர்கள் என பட்டியலிட்டால் அதில் பொன்னாய் மின்னுவது… பாரதிராஜா… மிகைப்படுத்தப்பட்ட கதைகளும், கதாபாத்திரங்களும் ஒப்பனைக்குள் புதைக்கப்பட்ட முகங்களும், மினுமினுக்கும் பட்டாடைக்குள் உலவித்திரிந்த மனிதர்களும்… பாரதிராஜாவின் வரவால்… கனவில் மறைந்தனர்…
உண்மைக் கதைகளும், மாந்தரும், எண்ணெய் கசியும் முகத்தோடு, வண்ணமிழந்த பஞ்சுப்புடவையில் சுற்றித்திரிந்த பெண்களும், திறந்த மார்போடு ஆண்களும், நாவில் உண்மையும், கேட்டறியா வட்டார வழக்குகளும், கண்ணுக்கும், காதுக்கும் தேனாய் பாய்ந்தன. கோட்டும் சூட்டுமாய் திரிந்த கதாநாயகர்கள் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும் கோவணமும், குதப்பிய வாயுமாய் பக்கத்தில் அமர்ந்தனர்…
தமிழ்ச்சினிமாவின், தடம் மாறியது புதுப்புது பிரதேசங்களில் பயணித்தது… பொட்டல் காடுகள், பூங்காவனத்தைவிட அழகாய் தோன்றின. கதை எழுதுபவர்கள் எல்லாம் கற்பனையை கைவிட்டு தத்தம் மண்ணின் வாழ்வியல் பக்கங்களை தேடிப்படித்தனர், எழுதினர், படைத்தனர்… நடிகர்களின் வசீகரத்திற்கு முன்னே அவர்தம் திறன்களே திரண்டு தெரிந்தது.
போர்வீரர்களாய் அவர்தம் உதவியாளர்கள், கூரிய கதைகளை படைத்து கலாச்சார மாற்றம் கொண்டு தந்தனர். எழுத்து மாறியது, பிம்பங்கள் மாறின, புது இசை பாய்ந்தது… காலங்கடந்து தமிழ்ச்சினிமாவில் புதுரத்தம் பாய்ந்தது…
இதுவரை அவன் இயக்குநராய், படைப்பாளியாய், இயக்குநர்களுக்கு முன்னுதாரணமாய் மட்டும் அல்லாமல், படைப்பாளிகளின் உரிமைக்காக போராடிய போர்வீரனாய் பொறுப்பேற்றான்…
தலைமையேற்று வழிநடத்தினான்…
சுயமரியாதையை படைப்பாளிகளுக்கு மீட்டுத்தந்தான்……
கவியரசர் கண்ணதாசன் வரிகளே நிதர்சனம்!
” நான் படைப்பதினால் என் பேர் இறைவன்!
எந்த நிலையிலும் எனக்கோ அழிவுமில்லை!
அவன் படைத்த காவியங்கள் என்றும் காலம் கடந்து நிற்கும், அவன் மரணத்தை மறக்க செய்யும்…
அன்னாரோடு பழகியோர், படமெடுத்தோர், போரிட்டோர், கையாளப்பட்டோர், எழுதியோர், இசையமைத்தோர் சுற்றத்தார் உறவினர் யாவரும் அம்மாபெரும் படைப்பாளியை இழந்து தவிக்கும் உணர்ச்சிப் பெருவெள்ளத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் கண்ணீர் அஞ்சலியில் உள்ளம் கரைகிறது.











