என் இனிய தமிழ் மக்களே’… என்று தன் கரகரத்த குரலால் ரசிகர் பெருமக்களை கட்டிப்போட்ட இயக்குனர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு, நடிகர் இயக்குனர் டி.ராஜேந்தர் இரங்கல்!
என் இனிய தமிழ் மக்களே’… என்று தன் கரகரத்த குரலால் ரசிகர் பெருமக்களை கட்டிப்போட்ட இயக்குனர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு, நடிகர் இயக்குனர் டி.ராஜேந்தர் இரங்கல்!
சென்னை 10 ஜூன் 2026 ‘என் இனிய தமிழ் மக்களே’… என்று தன் கரகரத்த குரலால் ரசிகர் பெருமக்களை கட்டிப்போட்ட அந்த தென்பாண்டி சிங்கமாம், தேனீ பக்கத்துல இருந்து வந்த தங்கமாம், தமிழ் திரை உலகத்தின் தலையாய அங்கமாம், இயக்குனர் இமயமாம் ஐயா பாரதிராஜா அவர்களுடைய மறைவு மனதை வாட்டுகின்றது.
16 வயதினிலே படத்திலே மயிலை படைத்தவர். கிழக்கே போகும் ரயிலில் ரயிலை குயிலாய் கூவி அழைத்தவர். புதிய வார்ப்புகளை வார்த்தவர். சிகப்பு ரோஜாக்களை விதைத்தவர். நிறம் மாறாத பூக்களாய் நிலைத்து நின்றவர்.
மண்வாசனையை பரப்பியவர். கிழக்கு சீமையிலே என்று கிளர்ந்தெழுந்து நின்றவர். முதல் மரியாதையை கண்டவர்.
தமிழ் திரை உலகத்தின் தலையாய மரியாதையை வென்றவர். அவருடைய மறைவு செய்தி மனதை ஈட்டி போல் தாக்குகின்றது. நெஞ்சம் தாங்கவில்லை. எப்படி தாங்குவது என்றே தெரியவில்லை.
அவரை இழந்து வாடக்கூடிய தமிழ் திரை உலகத்து ரசிக பெருமக்களுக்கும், தென்னிந்திய ரசிக பெருமக்களுக்கும், அவரை இழந்து வாடக்கூடிய அவருடைய இல்லத்தாருக்கும், என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அன்னாருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்…
இப்படிக்கு நடிகர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், திரைப்பட விநியோகஸ்தர், மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் டி.ராஜேந்தர்











