ஆண் தேவதை

பெண்களில் மட்டும்தான் தேவதை இருக்கிறார்களா, ஆண்களிலும் தேவதை இருக்கிறார்கள். தங்கள் குடும்பங்களுக்காகத் தங்களையே வருத்திக் கொள்ளும் ஒவ்வொரு ஆண் மகனும் தேவதை தான் என்கிறார் படத்தின் இயக்குனர் தாமிரா.

ஏழைகளை விட, பணக்காரர்களை விட இந்த நாட்டில் நடுத்தரக் குடும்பங்கள்தான் அதிகம். அந்தக் குடும்பங்களில் இருக்கும் பரவலான ஒரு பிரச்சினையை கதையாக எடுத்து அதை மிக இயல்பாகக் கையாண்டிருக்கிறார் இயக்குனர்.

சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் இருவரும் காதல் தம்பதியினர். இவர்களுக்கு இரட்டையர்களாக ஒரு மகள், ஒரு மகன். இருவரையும் கவனித்துக் கொள்வதில் பிரச்சினை இருக்கவே யாராவது ஒருவர் வேலையை விட்டு குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என முடிவெடுக்கிறார்கள். ரம்யா தன் வேலையை விட மறுக்க, சமுத்திரக்கனி அவரது மெடிக்கல் ரெப் வேலையை விட்டு வீட்டுக்காக ‘ஹவுஸ் ஹஸ்பென்ட்’ ஆக மாறுகிறார். இருந்தாலும் ரம்யாவின் அடுத்த கட்டத்திற்குப் போக வேண்டும் என்ற ஆசை குடும்பத்துக்குள் புயலை உருவாக்குகிறது. அந்த சண்டை விஸ்வரூபமெடுக்க, சமுத்திரக்கனி மகளை மட்டும் அழைத்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறுகிறார். ரம்யாவுக்கும் ஒரு கட்டத்தில் வேலை போகிறது. பிரிந்த கணவன், மனைவி அவர்களது தவறை உணர்ந்து ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் இந்த ‘ஆண் தேவதை’.

சமுத்திரக்கனிக்காகவே படைக்கப்பட்ட கதாபாத்திரமோ என நினைக்கும் அளவிற்கு உருவாக்கப்பட்ட கதையின் நாயகன் இளங்கோ-வாக சமுத்திரக்கனி. அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார். குழந்தைகள் மீது பாசம் செலுத்துவது, மனைவிக்கு எது தவறு என்பதை சுட்டிக் காட்டுவது, பக்கத்து வீட்டுப் பெண்களுடன் நட்பாகப் பழகுவது என அவரது நடிப்பில் அவ்வளவு யதார்த்தம். வழக்கம் போல அட்வைஸ் மழை பொழியவும் அவர் தயங்கவில்லை. இந்த மாதிரி கதாபாத்திரங்களை இந்தக் காலத்தில் பார்ப்பது அரிது. குடும்பத்திற்காகத் தியாகம் செய்யும் இந்த மாதிரியான ஆண் தேவதைகள் நாட்டில் அதிகம் வந்தால் எந்தக் குடும்பமும் பிரச்சினையில் சிக்காது, விவாகரத்து நடப்பதற்கும் வேலை இருக்காது.

சமுத்திரக்கனியின் மனைவியாக ஜெஸ்ஸி ஆக ரம்யா பாண்டியன். எதற்கும் விட்டுக் கொடுக்காத ஒரு பிடிவாதமான கதாபாத்திரம். தன்னுடைய குழந்தைகளை விட அலுவலகமும், வெளிநாடு செல்வதும் முக்கியம் என நினைப்பவர். இப்படி ஒரு மனைவி அமைந்தால் வாழ்க்கை என்பது எப்படி வரமாக அமையும். ஜெஸ்ஸி கதாபாத்திரம் மீது நமக்கு வெறுப்பு வந்தால் அதுவே அவருடைய நடிப்புக்குக் கிடைத்த வெற்றி. இன்றைய பல இளம் பெண்களின் கதாபாத்திரத்தை தன் நடிப்பின் மூலம் மிக இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் ரம்யா.

சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் மகளாக பேபி மோனிகா, மகனாக கவின் பூபதி. வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் மத்தியில் சிக்கித் தவிப்பவர்களாக பரிதாபத்தை வரவழைக்கிறார்கள். வரம்பு மீறிய வாழ்க்கைக்கு ஆசைப்படும் கதாபாத்திரத்தில் சுஜா வருணி, சமுத்திரக்கனிக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் ராதாரவி ஆகியோரும் குறிப்பிட வேண்டியவர்கள்.

ஜிப்ரான் இசையமைப்பில் கதைக்குத் தேவையான இடங்களில் மட்டுமே பாடல்கள் வருகின்றன. ‘நிகரா, தன்னிகரா.’ பாடல் இனிமையாக உள்ளது.

சமுத்திரக்கனி வீட்டை விட்டு வெளியேறியதும், அவருக்கு முன்பின் தெரியாத யாரோ சிலர் உதவி செய்வது வழக்கமான சினிமா பார்ப்பது போலவே உள்ளது.

அளவான வாழ்க்கை வாழ விரும்புபவர்களும், தகுதிக்கு மீறி வாழ ஆசைப்படுபவர்களும் அவசியம் பார்க்க வேண்டிய படம் ‘ஆண் தேவதை’.

[penci_review id=”3189″]