தமிழக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சியான் விக்ரம் ரூ.30 லட்சம் நிதி வழங்கினார்.
சென்னை 17 மே 2021
தமிழக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சியான் விக்ரம் ரூ.30 லட்சம் நிதி வழங்கினார்.
கொரோனா வைரஸ் நோய் தொற்றை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.
கொரோனா 2-ம் அலையானது தற்பொழுது நாடெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் தாராளமாக நன்கொடை வழங்குமாறு தமிழக முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து திரை உலக பிரபலங்கள் பலரும் தமிழக முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் தடுப்பு பணிக்காக தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சியான் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார். ரூ.30 லட்சத்தை அவர் ஆன்லைன் மூலமாக அனுப்பி உள்ளார்.